நன்றி : I love Tamilnadu
தமிழ்ச் சினிமாவில் பல படங்களில் இந்தக் கதை அமைந்து இருக்கும்.ஏழைக்
கதாநாயகன் அல்லது வில்லனால் ஏழையாக்கப்பட்ட கதாநாயகன்"நானும் உன்னைப் போல
பணக்காரனாகி,உன்னையும் உன் திமிரையும் அடக்கலைன்னா நான் என் பேரை
மாத்திக்கிறேன்!" என்று ஆக்ரோஷமாக கூறி சென்னைக்கு ரயிலேறுவார்.
ஒரு வழியாக சினிமா இலக்கணத்திற்கே உரியவாறு செல்வந்தரின் அபிமானத்தைப் பெற்று மிகப் பெரிய கோடீஸ்வரராகவும் மாறுவார்.
அப்புறம் கிராமத்திற்கு திரும்பி,தாம் சவால் விட்ட வில்லனை வாய் பிளக்க வைத்து,கூடவே தனது காதலியை-அநேகமா வில்லனின் மகள்- மணந்து கொள்வதுடன் படம் சுபமாக முடியும்.
இந்த வகையறா கதைகள் நம் சினிமாக்களில் அரதப்பழசாகிப் போனாலும்,அது சென்னையை தாண்டி, தமிழகத்தின் கடைகோடி கிராமத்து இளைஞன் வரை தாக்கத்தை ஏற்படுத்த தவறியதில்லை.
இந்தக் கதைகளின் தாக்கத்தில் மெட்ராசுக்கு ரயிலேறியவர்கள் கணக்கிடலங்காது;இது 70, 80 களின் நிலை என்றால்,தற்போது தொலைக்காட்சிகள் மற்றும் இதர இணையங்கள் வாயிலாக சகலத்தையும் அறிந்துகொண்டு அசால்டாக ரயிலேறிவிடுகிறார்கள் சென்னைக்கு!
இதுபோன்று பிழைப்புத் தேடி வருபவர்களால் சென்னை மாநகரத்தின் மக்கள் தொகை 45 லட்சமாக உயர்ந்துள்ளது.இவர்களைத் தவிர ரேஷன் கார்டு இல்லாத நிலையில் வசிப்பவர்கள் எண்ணிக்கை பல லட்சம் இருக்கும்.
புறநகர் பகுதியில் இருந்து சென்னைக்கு வேலை காரணமாக வந்து செல்பவர்கள்... தற்காலிகமாக சென்னைக்கு வந்து பணிபுரிபவர்கள் என்று நாளுக்கு நாள் மக்கள் தொகையின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டி பெருகிக் கொண்டே போகிறது.
சென்னையின் பூர்வீகக் குடிகளாக சொந்த வீடு உள்ளவர்கள், நல்ல வசதி படைத்தவர்கள். தனியார்துறையிலோ அரசுத்துறையிலோ நல்ல சம்பளத்தில் உள்ளவர்கள்தான் வசதியான வீடுகளில் நல்ல நல்ல அப்பார்ட்மெண்டுகளில் வசிக்கிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் என்ஜினீயரிங் கல்வி முடித்த 50 லட்சம் பேர்களில், 30 லட்சம் பேர் வேலைக்காக சென்னையில் வந்து இறங்கி விட்டனர். வேலை கிடைத்ததும் 4 மாணவர்கள் கூட்டாக சேர்ந்து 6 ஆயிரம் ரூபாய் தரக்கூடிய அப்பார்ட்மென்ட்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து குடியேறுகிறார்கள்.
அரசு சார்பாக வீட்டு உரிமையாளர்கள் வசூலிக்கும் வாடகையைக் கண்காணிக்க எந்தவித அமைப்பும் இல்லாமல் இருப்பது மிகப் பெரிய துரதிர்ஷ்டம். பேராசை பிடித்த இவர்களும் புரோக்கர் கோமாளிகளும் ரியல் எஸ்டேட் கொள்ளைக்காரர்களும் செயற்கையான ஒரு பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றனர்.
அதன் வாய்க்கு வந்த வாடகை, அபரிமிதமான அட்வான்ஸ் என்று நடுத்தர வர்க்கத்தினரை போட்டுத்தாக்குகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர், தங்கள் வருமானத்தில் இரண்டில் ஒரு பகுதியை வாடகையாகக் கொடுத்தால்தான் நல்ல வீடுகளில் வசிக்க முடியும் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.
இது ஒருபுறம் இருக்க புறநகர் ரயில்களிலும்,மாநகர பேருந்திலும் நெரிசலில் பயணித்து வேலைக்கு சென்று,வீடு திரும்புவதற்குள் உடல் சக்கையாகிவிடுகிறது.
ஆப்புதனை அசைத்து விட்ட குரங்கைப் போல் இந்த சென்னை நகர வாழ்க்கையை விட்டு விடவும் முடியாமல், ஒட்டிக் கொள்ளவும் முடியாமல் நாட்கள் ஓடிக் கொண்டிருக்கும்.
சொந்த கிராமத்தில் நிலபுலன்கள் இருக்க, பட்டப்படிப்பு படித்து இருக்கும் ஒரு காரணத்திற்காகவே நகர வாழ்க்கை என்னும் சிலுவையை சுமந்து திரியும் அவல நிலை. வீடு, காடு, சாதிசனம் எல்லாமும் வேண்டும்; மகன் மட்டும் பேண்ட் போட்ட ஒயிட்காலர் ஜாப் பார்க்க வேண்டும் அதுவும் சென்னை,கோவை போன்ற பெரு நகரத்தில் வேலை வேண்டும் என்னும் முரண்பட்ட சிந்தனையே இதற்குக் காரணம்.
கிராமங்களில் சுய தொழிலுக்கென மத்திய,மாநில அரசுகள் அநேக நலத்திட்டங்களை வழங்கி வந்தாலும் இளைஞர்கள் அவற்றைப்பற்றி தெரிந்து கொள்ள அக்கறைக்காட்டுவதில்லை; அப்படியே அறிந்து கொள்ளலாம் என்று வருபவர்களையும் அதிகாரிகள் முறையாக வழிநடத்துவதில்லை.
கூடவெ உள்ளூரில் இருந்தால் சதா சர்வகாலமும் டாஸ்மாக்கில் குடித்து விட்டு வம்பு செய்து கொண்டு கிடப்பதும் இவர்களை சென்னைக்கு வேலைக்கு அனுப்புவதற்கு ஒரு காரணமாக கிராமப்புற பெற்றோர்களால் சொல்லப்படுகிறது.விவசாய வேலைகள் செய்வதை விரும்பாத ஒரு இளையதலைமுறை உருவாகி வருவதும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு புலம் பெயர்ந்து வருபவர்களுக்கு இந்த ஊர் மற்றும் இதன் வாழ்க்கை முறை தங்களுக்கு மிகவும் சிரமம் என்பது புரிந்து விடுகிறது.ஆனால் ”மெட்ராஸ் வரைக்கும் பொழைக்கப் போயிட்டு அங்க முடியாம இங்க வந்துட்டாங்க..!” என்ற வசைச் சொல்லுக்கு பயந்தே பலர் இந்த மாநகர வாழ்க்கையை சகித்து கொள்கிறார்கள்.
கிராமங்களில், அதன் அருகாமையில் உள்ள நகரங்களில் பணிபுரிய வாய்ப்புகள் இருந்தும் கடினமான இந்த வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.காரணம் சொந்த ஊர் பகுதியில் 4 ஆயிரம் ரூபாய் சம்பளம்.சென்னையில் அதே வேலைக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்ற மயக்கத்தில் வேலை பார்க்கிறார்கள்.
உண்மையில் சொந்த ஊரில் மாதம் ஆயிரம் ரூபாய் சேமிக்க முடிந்த அவரால் சென்னையில் மாதம் ஆயிரம் ரூபாய் கடனாளியாகி, போனஸைக்கூட சேர்ந்த கடன்களுக்குக் கொடுத்து விட்டு மறுபடியும் செக்குமாடு போல் தன் அலுவலகத்துக்கு வழக்கமான தனது புலம்பலுடன் புறப்பட்டு செல்வார்.
இதில் சில கணவன் மனைவியர், பெரியவர்கள் எவர் துணையும் இல்லாமல் சென்னையில் தங்களின் பிள்ளைகளை வளர்க்க வேண்டுமானால், அவர்கள் படும் துயரங்கள் சொல்லி முடியாது. சொந்த மண்ணில் தாய் தந்தையர் அரவணைப்பில், சித்தப்பா சித்தி மாமா அத்தை தாத்தா பாட்டி என்று வளர வேண்டிய குழந்தைகள் யாருமற்றவர்கள் போல் பக்கத்து பிளாட் குழந்தைகளுடன் ஒட்டியும் ஒட்டாமலும் வளர்கிறார்கள்.
வாணியம்பாடியின் வானம்பாடி கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் கூறியது போல் ”இவர்கள் தன்னை விற்று விட்டு எதை வாங்கப் போகிறார்கள்?” என்பதைத்தான் நினைக்க வேண்டியிருக்கிறது.
ஒரு மனிதன் பரிபூரணமான மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமானால் ஏழு விஷயங்கள் அவசியம் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். 1. சொந்த ஊர் 2. தாய் தந்தையர் மற்றும் உறவினர்கள் 3. சொந்த வீடு 4. நண்பர்கள் 5. பணம் 6. கேளிக்கை நிகழ்ச்சிகள் திருவிழாக்கள், திருமண விழாக்கள் 7. ஆரோக்கியமான உடல் நலம்.
இந்த ஏழு விஷயங்கள் இருந்தால் தான் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும்.அப்போது நம் சிந்தனை வளம் மேம்பட்டு இருக்கும்.நம் மனநலமும் காக்கப்படும்.ஓஷோவின் பொன் வாக்கியமான வாழ்க்கையைக் கொன்டாட முடியும்.இல்லாவிட்டால் கவலை படுவதிலேயே நம் வாழ்க்கை முடிந்து போய் இருப்பதைத்தான் உணர முடியும்.
நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்துக் கொண்ட இரண்டு நண்பர்கள் இப்படி பேசிக் கொண்டார்கள்.”சென்னையில் ஏதோ சாதிக்கப் போறேன்னு புறப்பட்டியே என்ன சாதிச்சே?” என்று ஒருவன் கேட்டான். அதற்கு அந்த நண்பன் பதில் சொன்னான்,” சென்னையிலே இருக்கிறதே ஒரு சாதனை தான்!” என்று.இது நகைச்சுவைக்காக சொல்லப்பட்ட பதில் அல்ல; அப்பட்டமான யதார்த்தத்தின் வெளிப்பாடு..!!!
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.