தங்கமீன்களைச் சுமந்தவனின் வலியை அறிவீர்களா?
ம.செந்தமிழன்
என்றைக்கு திரையரங்க வாசலில் இரு கைகளையும் உயர்த்தச் சொல்லி, நம்மைச் சோதனையிடத் தொடங்கினார்களோ, அன்றைக்கே திரைப்படங்களுக்கும் நமக்குமான உணர்வுப்பூர்வ உறவு அற்றுப்போனது. இடைவேளையில், நாம் எந்த நிறுவனத்தின் நீரைப் பருக வேண்டும், அதற்கு என்ன விலை தர வேண்டும் என்பதைக்கூட திரையரங்க முதலாளிகள்தான் தீர்மானிக்கிறார்கள். குழந்தைகளுக்கான பால் புட்டிகளைக் கூட அனுமதிக்க மறுக்கும் அரங்குகளும் இருக்கின்றன.
இந்த நிலையில், தங்கமீன்கள் வெளியிடுவதை அவர்கள் தள்ளிப்போடுவதில் என்ன ஆச்சர்யம் வேண்டிக்கிடக்கிறது?
‘பாலை’க்கு அரங்குகள் கிடைக்காதபோதும் இதே நிலைதான். நாங்கள் முற்றிலும் புதியவர்கள், எந்த பெரிய முகமும் இல்லை, எந்தப் பெரிய நிறுவனமும் இல்லை. வெளியீட்டுக்காக அலைந்தபோது, ஒரு பெரும் நிறுவனத்தின் பிரதிநிதி, ’வெளியிட வேண்டுமெனில், 75 லட்சம் கட்டணம் தர வேண்டும்’ என்றார். எங்கள் படத்தின் மொத்தச் செலவே அதைக் காட்டிலும் குறைவு.
தங்க மீன்களோ, கௌதம் வாசுதேவ் மேனன் எனும் பிரபலத்தின் தயாரிப்பு, யுவன்ஷங்கர் ராஜாவின் இசை, இன்னும் பல கலைஞர்களும் பிரபலமானவர்களே. இயக்குனர் ராம், புதியவர் அல்ல.
ஆனாலும், அவர்கள் ஜூலை 26 என நாள் குறித்து அறிவித்த பின்னரும் அந்த நாளில் வெளியீடு மறுக்கப்படுகிறது. இதற்குப் பணமும் செல்வாக்கும் மட்டுமே காரணம் என நான் எண்ணவில்லை. மாறாக, திரைப்படங்கள் குறித்த மதிப்பீடுகளே அடிப்படைக் காரணம். வலுவான கதை, வலுவான காட்சியமைப்பு இருந்தால், அவ்வகைப் படங்களைக் கண்டு வணிகர்கள் அஞ்சுகிறார்கள் அல்லது அவற்றை வெறுக்கிறார்கள். புதிதாக எவரேனும் ஒரு முயற்சியில் இறங்கினால், அம்முயற்சியை எள்ளி நகையாடும் வழக்கம் திரைத்துறையினரிடையே கூட உள்ளது.
‘பாலை ஒரு சினிமாவே இல்லை’ என்றவர்களை நாம் கண்டோம். அப்படத்தை வெளியிட முடியாமல் திணறியபோது, எங்களை மிகவும் புண்படுத்தியவை, இவ்விதமான கருத்துகளே. ஆனால், நாங்கள் எங்கள் கடமைகளைச் செய்தோம். எங்கள் உழைப்புக்கான பலன்களைப் பெற்றோம். தோற்கவும் இல்லை, ஒதுங்கி ஓடவும் இல்லை.
இப்போது, எங்கள் குழுவின் ஏறத்தாழ அனைத்து உறுப்பினர்களும் அவரவருக்கான அடுத்த நிலைகளில் மனநிறவுடன் முன்னேறிச் செல்கிறோம்.
’கற்றது தமிழ்’ மீதும் மோசமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மக்கள் அப்படத்தைத் தூக்கிச் சுமந்தார்கள். எண்ணற்ற இளைஞர்கள், முற்போக்கு இயக்கங்கள், சிற்றிதழ்கள், திரைப்பட இயக்கங்கள், சமூக வலைதள எழுத்தாளர்கள் என ஊரே கூடி அந்தத் தேரை இழுத்தது. அதனால்தான், அந்தத் திரைப்படம் வெளியாகி, ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும், அதன் இயக்குனர் இன்னும் உயிர்ப்புடன் இயங்குகிறார்.
அவரது அடுத்த திரைப்படம் மிக நீண்ட இடைவெளியில் வெளியானாலும், முதல் நாள் முதல் காட்சியில் காண வேண்டும் எனத் துடிக்கும் மக்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன்.
தங்க மீன்கள் கதையை ராம், எங்கோ ஒரு ஊரில் இருந்து கொண்டு எனது அலைபேசியில் வாசித்துக் காட்டுவார். அப்போது நான் எங்கள் நிலத்தில் வாய்க்கால் வெட்டிக் கொண்டோ, இயற்கை எரு தயாரித்துக் கொண்டோ இருப்பேன். ஏறத்தாழ பத்து நாட்கள் தினசரி தாம் எழுதிய கதையை எனக்குப் படித்துக் காட்டுவார். இப்படி ஒரு கதை தமிழில் திரைப்படமாக வந்தால், அது உன்னதமாயிற்றே என நான் சிலிர்த்த நாட்கள் அவை. என் நண்பர்கள், குடும்பத்தினர் அனைவரிடமும், ‘இந்தப்படம் வெளியானால், தமிழ் சினிமாவே மாற்றம் பெறும்’ என நான் கூறியதுண்டு.
அதன் பின்னர், உருப்படியான தயாரிப்பாளர் கிடைக்காமல் ராம் அலைபாய்ந்த போதெல்லாம், அவருடன் இணைந்தே அலைபாய்ந்தவன் நான். மாரிச்செல்வம் எனும் அவரது உதவி இயக்குனரும், நானும் அண்ணன் தம்பிகளாக மாறிப் போனோம். என் மனைவியும் மகனும் மாரிச் செல்வமும் நெருங்கிய உறவுக்காரர்களானார்கள்.
தங்க மீன்கள், ராம் மனதில் சூல் கொண்டு முட்டை உடைத்து வெளிவரத் துவங்கிய காலத்தில், நாங்கள் ஒரு குடும்பமாக வாழ்ந்தோம். தங்க மீன்கள் எங்கள் குடும்பத்தின் அங்கம் என நான் எண்ணுவதுண்டு.
இப்போது, அது உங்கள் பார்வைக்காகக் காத்துக் கிடக்கிறது.
இந்தப் படம் வெளியிடும் காலம் தள்ளிப் போவது, வேறு எவரைக் காட்டிலும், ராம்-க்கு எவ்வளவு வேதனையைத் தரும் என்பதை நான் மிக நெருக்கமாக உணர்கிறேன். ராம், நடித்திருப்பது, தமிழ் சினிமாவின் மிக நல்ல மாற்றங்களுக்கான அறிகுறி என்றே நான் நம்புகிறேன்.
நண்பர்களே, ஐந்து ஆண்டுகள் ஒரு கருவைச் சுமப்பது, எளிதல்ல. ஏதோ ஒரு குப்பையைச் சுமந்து உங்கள் தலையில் கொட்டிவிட்டு, உங்கள் பணத்தைப் பிடுங்க ராம், முற்படவில்லை. உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கான தங்கமீன்களை அவர் சுமந்து பெற்றிருக்கிறார்.
இப்போது, அரங்கங்கள் மறுக்கப்படும் இந்தக் காலத்தில், நாம் என்ன செய்யலாம் என சிந்திப்போம். நல்ல சினிமா வேண்டும் என எண்ணுகிறோம். அப்படியான மாற்றத்தைச் சாத்தியப்படுத்துவதில் நம் கடமை என்ன?
இந்த இடைப்பட்ட காலத்தில், நம்மால் எந்தளவுக்குத் தங்கமீன்கள் குறித்த தகவல்களைக் கொண்டு செல்ல முடியுமோ அந்தளவு கொண்டு செல்வோம். முதல் மூன்று நாட்கள் முன்பதிவில் முடிந்துபோயின, எனும் நிலைக்குப் பணியாற்றுவோம்.
உங்கள் பார்வைக்குக் கொண்டுவரப்படும் திரைப்படம், உங்களைக் குப்பைத் தொட்டிகளாக மாற்றிவிடக்கூடாது, எனும் எண்ணமே எங்களைப் போன்ற இயக்குனர்களை ஆட்டிப் படைக்கிறது. இதற்காகவே, நாங்கள் வெளிக்காட்டவியலா இன்னல்களைச் சுமக்கிறோம். எங்களுக்கு நல்ல கல்வியுண்டு, குடும்பம் உண்டு, வேறு பணிசெய்தால், செல்வமும் உண்டு. இவற்றைக் கருதாது எங்களை நாங்களே இச்சுழலில் தள்ளிவிட்டுக் கொண்டு நீந்துகிறோம் என்பதே உண்மை.
பாலை, காப்பாற்றப்பட்டது. அதன் இயக்குனரான நான் இப்போது, அடுத்த திரைப்படத்தில் மனநிறைவுடன் இயங்கிக் கொண்டிருக்கிறேன். இந்த எனது நிலையை உருவாக்கியதில், உங்களுக்குப் பெரும் பங்கு உண்டு.
தங்கமீன்கள் படத்தை, வணிக வெற்றிப் படமாக எடுத்துச் செல்வதிலும் உங்களால் பங்களிப்பு செய்ய இயலும் என நம்புகிறேன்.
இது சாத்தியமாக வேண்டும் என இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன்!
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.