இந்தியாவின் மக்கள் தொகை 125 கோடியை தாண்டி விட்டது . உலகின் இரண்டாம் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியாவாகும். இப்படத்தில் இந்திய மாநிலங்களில் உள்ள மக்கள் தொகையோடு அதே அளவு மக்கள் தொகை கொண்ட நாடுகளை ஒப்பிட்டு அந்த நாடுகளின் பெயர்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதாவது பிரேசில் நாடு உலகில் 5 ஆவது பெரிய நாடாகும். ஆனால் மக்கள் தொகையில் இந்தியாவில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்திற்கு அது சமமானது. அதே போல் தமிழகமும் தாய்லாந்து மக்கள் தொகைக்கு சமமானது.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது. இந்தியாவில் உள்ள மாநிலங்களின் அளவுள்ள நாடுகள் எல்லாம் தங்கள் மொழியை , பண்பாட்டை, இயற்கை வளங்களை தக்க வைத்துக் கொள்ளும் போது ஏன் இந்தியாவில் உள்ள தொன்மையமான தேசிய இனங்கள் எந்த அடையாளத்தையும் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்பது தான் . இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட தேசிய இனங்கள் டெல்லி என்ற ஒற்றை ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு கிடப்பதால், இந்த இனங்கள் எல்லாம் தங்கள் அடையாளத்தையும், மொழியையும் , வளங்களையும் அவர்கள் ஒப்புதல் இல்லாமலே இழந்து வருகின்றன.
சிலர் கேட்கிறார்கள் , தமிழகம் போன்ற சிறு மாநிலங்கள் தனி நாடானால் எப்படி சமாளிப்பது, எப்படி வாழ்வது என்று. ஆனால் இங்கு காட்டப்பட்டுள்ள பல நாடுகள் மக்கள் தொகையில், நிலப்பரப்பில் தமிழகத்தை விட சிறியது , இருந்தும் உலக வரைபடத்தில் தங்களுக்கு என்று தனித்துவமான இடத்தை பிடித்திருக்கின்றன. தங்கள் இன மொழி அடையாளங்களை தற்காத்து வந்துள்ளன. தமிழினம் உட்பட எல்லா தேசிய இனங்களுக்கும் தேவை தற்காப்பு தான். அந்நிய மொழிகளில் இருந்தும் , பண்பாட்டு படையெடுப்புகளில் இருந்தும் நில ஆக்கிரமிப்பில் இருந்தும் பாதுகாப்பு தேவை. இப்படியான எந்த பாதுகாப்பும் இந்தியாவில் உள்ள தேசிய இனங்களுக்கும் அவர்கள் சார்ந்த மாநிலங்களுக்கும் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த கசப்பான உண்மை.
உலகில் உள்ள பல்வேறு மொழி பேசும் நாடுகள் தங்கள் உரிமைகளை பாதுகாக்க அவர்களுக்கு என்று ஒரு தனி அரசு உள்ளது. ஆனால் இந்தியாவில் தேசிய இனங்கள் தங்களை காத்துக் கொள்ள அவர்களுக்கென்று தனி அரசு இல்லை. எல்லாவற்றுக்கும் டெல்லியை எதிர்பார்த்தே இருக்க வேண்டிய அடிமை நிலையில் உள்ளன. அதனால் இனங்கள் பாதுகாப்புக்கு மாநில அரசுகள் தன்னாட்சி உரிமை, சுய நிர்ணய உரிமை பெறுவது காலத்தின் கட்டாயமாகும். டெல்லியின் ஒற்றை ஆட்சி முறை வீழ்த்தப்பட வேண்டும். மாநிலங்கள் தங்கள் இனம் காக்க, மண் காக்க மொழி காக்க அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும். மாநிலங்கள் வளம்பெற்றால் தான் இந்தியா வளம்பெற முடியும். பண்பாடுகள் , மொழியை தக்கவைத்தால் தான் உண்மையான வேற்றுமையில் ஒற்றுமை காண முடியும். இதுவே வளமான எதிர்கால இந்தியாவை உருவாக்கும். இதை வலியுறுத்தும் அரசியல் கட்சிகளுக்கு நாம் ஆதரவு வழங்க வேண்டும்.
வாழ்க தமிழ் ! வாழ்க வையகம்!
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.