பூவே பூச்சூடவா
எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவரான பாசிலின் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு நதியா, ஜெயசங்கர், பத்மினி, எஸ்.வி.சேகர் முக்கிய வேடங்களில் நடிக்க இளையராஜாவின் இசையில் P.C.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் வெளிவந்த திரைப்படம் பூவே பூச்சூடவா. இந்த திரைப்படத்தில் நதியா, பத்மினி இடையிலான பேர்த்தி, பாட்டி உறவினை சித்தரிக்கும் முகமாக திரைக்கதையை அமைத்திருபார் இயக்குனர் பாசில். நீண்ட நாட்களாக தன் பேர்த்தி வருவார் என்கின்ற நம்பிக்கையில் அழைப்புமணியை எதிர்பார்த்து காத்திருக்கும் பாட்டிக்கு ஒருநாள் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் பேர்த்தி, பாட்டியிடம் அவரை விட்டு போகமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுக்கிறார்.
ஆனால் நதியா ஆபத்தான ஒரு நோயினால் பாதிக்கப்பட்டுத்தான் தன் இறுதிக்காலத்தை கழிக்க பாட்டியிடம் வந்தது பாட்டிக்கு தெரிகிறது; பேர்த்தியை குணப்படுத்து முகமாக பட்டணம் கொண்டுசெல்ல பாட்டி வீட்டிற்கு வந்த தந்தையுடன் செல்ல மறுக்கும் பேர்த்தியை பாட்டியின் சம்மதத்துடன் தூக்கமாத்திரை கொடுத்து தூக்கத்தில் ஒரு வண்டியில் ஏற்றி பட்டணம் கொண்டு செல்கின்றனர். வண்டி வீட்டு வாசலை கடந்த பின்னர் பாட்டி மீண்டும் அழைப்புமணியை எடுத்து வாசலில் பொருத்தும்போது திரைப்படம் நிறைவடைகின்றது. நதியா குணமானாரா? மீண்டும் பாட்டியை சந்தித்தாரா? போன்ற கேள்விகள் ரசிகர்களின் ஏக்கமாக தொக்கி நிற்க திரைப்படத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பசில்; இன்றுவரை என் மனதில் பூவே பூச்சூடவாவை அழுத்தமாக பதித்துள்ளார்.
சின்னக் கண்ணம்மா
ஆர்.ரகு இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு கார்த்திக், கௌதமி, சுஹாசினி, நாசர் முக்கிய வேடங்களில் நடிக்க இசைஞானி இசையமைத்த திரைப்படம் சின்னக் கண்ணம்மா. கார்த்திக், கௌதமி தம்பதியினருக்கு குழந்தை பிறக்கின்றது; மகிழ்ச்சியான அவர்கள் வாழ்வில் கௌதமி இறந்துவிடுகின்றார். தன் குழந்தையுடன் ஊட்டி சென்று வசிக்கும் கார்த்திக்கிற்கு குழந்தைதான் எல்லாமே, தன் வாழ்வை குழந்தைக்காகவே வாழ்கின்றார். அங்கு அவர்களுக்கு நாசர், சுஹாசினி நட்பு கிடைக்கிறது. அவர்களுக்கு இரு குழந்தைகள்; ஆண் குழந்தை ஒன்று, பெண் குழந்தை ஒன்று. சுஹாசினியின் குழந்தைகளில் சிறிய குழந்தை (பெண்குழந்தை) இறந்து விடுகிறது.
அவர்களது சோகத்தை கார்த்திக்கின் குழந்தை தணித்துவரும் நிலையில்; கார்த்திக்கின் குழந்தைதான் தங்கள் குழந்தை என்றும், இறந்த குழந்தைதான் கார்த்திக்கின் குழந்தை என்றும், மருத்துவமனை தீ விபத்தில் குழந்தைகள் மாறியதாகவும் தெரியவருகிறது. குழந்தைக்காக நீதிமன்றம் செல்லும் நாசர், சுஹாசினிக்கு சார்பாக தீர்ப்பு வருகிறது. குழந்தை இல்லாமல் கார்த்திக் ரயில் நிலையத்தில் ஊருக்கு திரும்ப காத்திருக்கும் வேளையில் நாசர் சுஹாசினியின் மகனாக வரும் சிறுவன் கார்த்திக்கின் குழந்தையை ரயில் நிலையம் அழைத்து வருகிறான்.
கார்த்திக்கின் குழந்தையை தோழியாக ஏற்றுக்கொண்ட அவனுக்கு இறந்துபோன தன் தங்கையின் இடத்தில் வைத்து பார்க்க முடியவில்லை. இதை புரிந்துகொண்ட நாசர் சுஹாசினி தம்பதியினர் குழந்தையை கார்த்திக்கிடமே விட்டுவிடுகிறார்கள். கார்த்திக்கை நோக்கி குழந்தையும், குழந்தையை நோக்கி கார்த்திக்கும் ஓடி வரும்போது ஒலிக்கும் 'எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல' பாடல் அந்த இறுதிக் காட்சியை வேறு ஒரு இடத்திற்கே கொண்டு சென்றுவிடுகிறது. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத நடிப்பும், பின்னணியில் ஒலிக்கும் பாடலிசையுடன் நிறைவடையும் சின்ன கண்ணம்மா என் மனதை கனக்க வைத்த, என் மனதுக்கு பிடித்த திரைப்படம்.
அன்புள்ள ரஜினிகாந்த்
1984 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரம் மீனாவை மையமாக கொண்டு கே.நடராஜ் இயக்கத்தில் திரைப்பட நடிகராகவே ரஜினிகாந்த், அம்பிகா நடிக்க; இசைஞானி இசையமைத்த மனதை உருக்கிய மற்றுமொரு திரைப்படம் அன்புள்ள ரஜினிகாந்த். ஒரு ரஜினி படத்தில் ரஜினியை தாண்டி இன்னுமொரு கேரக்டர் என்னை பாத்தித்ததென்றால் அது அன்புள்ள ரஜினிகாந்த் மீனா கதாபாத்திரம்தான். இறக்கும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் குழந்தையை அருட்சகோதரியும், நடிகர் ரஜினிகாந்தும், தாயாக இருந்தும் சொல்லமுடியாது தவிக்கும் அம்பிகாவும் கவனாமாக பார்த்துக் கொள்கிறார்கள். இறுதியில் நோயின் பிடியில் சிக்கி அந்த குழந்தை இறந்துபோகிறது.
இந்த திரைப்படத்தில் பல இடங்கள் மனதை கட்டிப்போட்டாலும் இறுதிக்காட்சியில் குழந்தை மீனா இறக்கும் காட்சி இதயத்தில் கல்லை கட்டிபோட்டது போன்ற உணர்வை கொடுத்தது. இறக்கும் தறுவாயில் குழந்தையாக நடித்த மீனாவினதும், ரஜினி, அம்பிகாவினதும் நடிப்பு காட்சிகளின் கனத்தை அதிகரித்து மனதில் பாரத்தை விதைத்தது. மனதில் ஏக்கத்துடன் திரைப்படம் நிறைவடைந்தாலும்; திரைப்படத்தின் தாக்கம் பார்த்த ஒவ்வொருவரையும் விட்டு அவ்வளவு இலகுவில் மறைந்துபோகாது!!!!
பூவே உனக்காக
1996 இல் விஜய், சங்கீதா, அஞ்சு அரவிந்த், சார்லி, நம்பியார், நாகேஷ் நடிக்க எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைக்க பூவே உனக்காக திரைப்படத்தை விக்கிரமன் இயக்கியிருப்பார். அதிகமானவர்கள் இந்த திரைப்படத்தை பார்த்திருப்பார்கள் என்றாலும் கதையை சுருக்கமாக சொல்வதானால்; தான் ஒருதலைப்பட்சமாக காதலித்த காதலியை அவளது காதலனுடன் சேர்த்து வைப்பதுதான் கதை.
கதை என்னமோ ஒற்றை வரிதான், ஆனால் அதற்க்கு விக்கிரமன் அமைத்த திரைக்கதை அபாரம். நகைச்சுவை, குடும்ப சென்டிமென்ட் என்று நகர்ந்த திரைக்கதையின் கிளைமாக்ஸ்சில் 'ஆனந்தம் ஆனந்தம் பாடும் பாடலும்' அதனை தொடர்ந்து விஜய் காதல் பற்றி பேசும் விக்கிரமனின் வசனங்களும், இறுதியாக விஜய் அனைவரையும் பிரிந்து தனித்து செல்வதுபோல் அமைக்கப்பட்ட இறுதிக் காட்சியும் எப்படிப்பட்ட கல் நெஞ்சக்காரனது இதயத்திலும் கனத்தை உண்டு பன்ணாமல் இருந்திருக்காது!!
சேது
பலநாள் தூக்கத்தை கெடுத்த மற்றுமொரு கிளைமாக்ஸ்; விக்ரம், அபிதா, ஸ்ரீமன், சிவகுமார் நடிப்பில் இளையராஜா இசையில், இரத்தினவேலு ஒளிப்பதிவில் பாலா இயக்கிய தமிழ் சினிமாவின் ஒரு மைல்கள் திரைப்படம் சேது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஜாலியாக இருக்கும் கல்லூரி மாணவனான முரட்டு சீயானுக்கும் ஐயராத்து மாமி அபிதாவிற்க்கும் காதல்; கனியாத காதலை கனிய வைக்கும் சீயானுக்கு காதலில் வெற்றி கிடைத்தாலும் சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு புத்தி சுவாதீனமற்றவராக மாறுகிறார். இந்நிலையில் அபிதாவிற்கு வேறொருவருடன் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. புத்தி சுவாதீனமற்றிருந்த சீயான் தெளிவடைந்து காப்பகத்தில் இருந்து தப்பித்து அபிதாவின் வீட்டிற்கு வருகிறார்.
அங்கு மணக்கோலத்தில் இருக்க வேண்டிய அபிதா பிணக்கோலத்தில்!!! அந்த காட்சியை கண்ட பின்னர் நொருங்கிப்போன சீயான் மீண்டும் காப்பகத்தின் வண்டியில் ஏற்றப்பட(ஏற) வண்டி புறப்பட்டு செல்கின்றது; திரைப்படமும் நிறைவடைகின்றது. இறுதி நேரத்தில் விக்ரமினது மிரட்டல் நடிப்பும், உடனிருப்பவர்களது ஏக்கமான சோகமான நடிப்பும்; இவை அனைத்திற்கும் கிரீடம் வைத்தாற்போல் பின்னணியில் இளையராயாவின் குரலில் ஒலித்த 'வார்த்தை தவறிவிட்டாய்' பாடலும் சேது திரைப்படத்தை வேறு ஒரு உயரத்திற்கு கொண்டுபோனதுடன், இன்றுவரை மனதையும் கட்டிப்போட்டுள்ளது!!
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.