நன்றி : Nagoorkani Kader Mohideen Basha
மின்சார தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடும் இச்சமயத்தில், இன்வெர்ட்டர்களை விற்கும் நிறுவனங்களும், வியாபாரிகளும் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், ஒரு மாதத்தில் 15 இன்வெர்ட்டர்களே விற்பனையான கடையில், இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட இன்வெர்ட்டர்கள் விற்பனையாகிறது. இந்நிலையில் புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, ஏற்கெனவே வைத்திருப்பவர்கள் அதை எப்படி பராமரிப்பது என்பது குறித்து இன்வெர்ட்டர் இன்ஜினீயரும் கொங்கு இன்ஜினீயர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான கே.பெரியசாமி அவர்கள் கூறியதாவது :
''இன்வெர்ட்டர்களில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, சைன் வேவ் இன்வெர்ட்டர். இரண்டாவது, ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர். இந்த இரண்டு வகையிலும் குறைந்த பட்சம் 250 வாட்ஸ், 400 வாட்ஸ் என இரண்டு வகை உண்டு. 250வாட்ஸில் ஒரு விளக்கு, ஒரு ஃபேன் இயங்கும். 400 வாட்ஸில் இரண்டு விளக்கு, இரண்டு ஃபேன் இயங்கும்.
இந்த இரண்டுமே பெரும்பாலும் இப்போது நடைமுறையில் இல்லை. இப்போது இருப்பது 650 வாட்ஸ் இன்வெர்ட்டர்கள்தான். இதில் ஒரு ஃபேன், ஒரு விளக்கு, ஒரு டி.வி. இயங்கும். 850 வாட்ஸ் கொண்ட இன்வெர்ட்டர்தான் நடுத்தர மக்களுக்கும், சிறுதொழில் செய்பவர்களுக்கும் அதிகம் பயன்படும். இன்றைய நிலையில் அதிகம் விற்பனை ஆகக்கூடிய இன்வெர்ட்டரும் இதுதான். இதில் ஐந்து விளக்குகள், நாலு ஃபேன் அல்லது டி.வி. அல்லது கம்ப்யூட்டர் அல்லது மிக்ஸியை இயக்கலாம்.
பொதுவாக இன்வெர்ட்டர்கள் எல்லாமே தானாக இயங்குபவை என்பதால், மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க ஆரம்பித்துவிடும். மின்சாரம் வந்ததும் அதன் இயக்கம் தானாகவே நின்று விடும். இன்வெர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால், மின்சாரத் திலிருந்து அதுவாகவே சார்ஜ் ஆகிக் கொள்ளும். இதனால் இன்வெர்ட்டர், பேட்டரி இரண்டையுமே கரன்ட் கனெக்ஷனில்தான் வைத்திருக்க வேண்டும்'' என்றவர், இன்வெர்ட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டார்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
தேவைக்குத் தகுந்தபடி இன்வெர்ட்டர் மாடல்களை தேர்வு செய்ய வேண்டும்.
மூன்று மணி நேரம் கரன்ட் கட் ஆகிற பகுதிகளில், அதற்கு ஏற்றார்போல மின்சாரத்தை சேமிக்கக் கூடிய பேட்டரிகளை தேர்வு செய்வது நல்லது.
இன்வெர்ட்டருக்கு அதிக டிமாண்ட் நிலவும் இச்சமயத்தில் இன்வெர்ட்டருக்கான பேட்டரி என்று சொல்லி, வேறு ஏதாவது ஒரு பேட்டரியை நம் தலையில் கட்டிவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, கவனமாக இருப்பது அவசியம்.
நீண்ட காலமாக இன்வெர்ட்டர் தயாரித்து வரும் நிறுவனங்களின் இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரிகளை வாங்கலாம்.
இன்வெர்ட்டர் வாங்கும் போது அந்த நிறுவனத்தின் சர்வீஸ் எப்படி இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்கள் வாங்குவதைவிட சைன்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்குவது நல்லது. ஏனெனில், சைன்வேவ் இன்வெர்ட்டர் நம் வீட்டுக்குத் தேவையான அளவு மின்சாரத்தை முழுமையாகத் தரும். இதனால், எலெக்ட்ரானிக் பொருட்கள் கெட்டுப் போகாது. ஆனால், ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்கி பயன்படுத்தும்போது ஃபேன், மிக்ஸி மாதிரியான எலெக்ட்ரானிக் பொருட்களில் இரைச்சலான சத்தம் வரும். இதனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் விரைவில் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது.
பராமரிப்பது எப்படி?
இப்போது மின்தட்டுப்பாடு அதிகமிருந்தாலும், இந்த பிரச்னை இன்னும் சில மாதம் கழித்து கொஞ்சம் தணியலாம். அந்த சமயத்தில், இன்வெர்ட்டரை பூட்டி, அப்படி ஒரு ஓரத்தில் வைத்து விடக் கூடாது. மாதம் ஒருமுறையேனும் கிடைக்கும் மின்சாரத்தை நிறுத்திவிட்டு, இன்வெட்டர் மின்சாரத்தை பயன்படுத்தினால் இன்வெட்டரும் பேட்டரியும் பழுதடையாமல் இருக்கும்.
பேட்டரியில் இருக்கும் டிஸ்டில்ட் வாட்டர் குறையும் பட்சத்தில், அதை கட்டாயம் நிரப்பி வைக்க வேண்டும். இதை செய்யாவிட்டால், இன்வெட்டர் இயங்காது. பேட்டரிகளில் டியூப்ளர் மற்றும் ஃப்ளாட் பிளேட்னு இரண்டு வகை இருக்கிறது. இதில் டியூப்ளர் பேட்டரி பயன்படுத்துவது நல்லது. இது நீண்ட காலத்துக்கு உழைக்கும். மற்ற பேட்டரிகளைவிட பராமரிப்புச் செலவும் குறைவுதான்'' என்றார்.
இன்வெர்ட்டர் பற்றிய அடிப்படை விஷயங்களைச் சொல்லிவிட்டோம். இனி இதை பின்பற்ற வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்!
பதிவு உதவி செய்தவர் Vasanthakumar Graphicdesigner
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.