நன்றி : டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் (apj@abdulkalam.com), வெ.பொன்ராஜ் (vponraj@gmail.com) & தினமலர்
Source : www.dinamalar.com
இதுபோல சிறந்த கட்டுரைகளை அவ்வபோது வெளியிடும் தினமலருக்கு ஒரு பாராட்டு
1. அனைத்து மாநிலங்களும் வளம் பெற தேசிய அதி திறன் நீர்வழிச்சாலை வேண்டும்
ஐந்தாண்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக, பல்வேறு பாதைகள் பின்பற்றப்பட்டன. அவற்றில் வேளாண்மைக்கும், நீர் மேலாண்மைக்கும் இரண்டு அடிப்படையான பாதைகள் பின்பற்றப்பட்டன.
அவற்றில், முதலாவது பாதையில், சுதந்திர இந்தியாவின் முதல் 30 ஆண்டுகளில் நாம் பயணித்தோம். அதன்படி மிகப் பெரிய அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள் ஆகியவை உருவாக்கப்பட்டன. 84 பெரிய அணைகளும், நீர்த்தேக்கங்களும் கட்டப்பட்டன. நீர் மேலாண்மையும், நீர்மின்சக்தி வசதிகளும் உருவாக்கப்பட்டன. ஆனால், அவற்றின் மூலம், ஆண்டுக்கு, 45 ஆயிரம் கோடி கன அடி தண்ணீரையே தேக்க முடிந்தது.
இரண்டாவது பாதையானது, டாக்டர் கே.வி.எல். ராவ், கேப்டன் டி.ஜே.தஸ்தூர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட, முறையான நதிகளை இணைப்பதும், கரை வாய்க்கால்களை (Contour Canal) அமைப்பதும் ஆகும். இரண்டாம் பாதை குறித்து, தேசிய அளவிலான விவாதங்கள், பல எழுந்தன. பல ஆய்வுகள் மேற்கொண்ட பின், இம்முறையில், தொழில்நுட்ப, சுற்றுச்சூழல், நிதி, அரசியல் தலைமை ஆகியவை தொடர்பான சவால்களை, எதிர்கொள்ள நேரிடும் என்பது தெரியவந்தது. தேசத்துக்கு இது முக்கிமானது, ஜீவாதாரமானது என்றாலும், மேற்கண்ட காரணங்களால், அரசின் முயற்சிகள் தடைபட்டன; இந்தப் பாதையில் நாம் முன்னேற முடியவில்லை.
வீணாகும் நீர் : இந்தியாவின் நீர் மேலாண்மை பிரச்னையை, தற்போதுள்ள நீர் கொள்ளளவு மற்றும் நீர் சமநிலை ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்ந்தோம்.இந்தியா, தன் எல்லா இயற்கை ஆதாரங்களின் வழியிலுமாக, ஓராண்டுக்கு மொத்தமாக, 12 லட்சம் கோடி கன அடி நீரை பெறுகிறது. இதில், 2.10 லட்சம் கோடி கன அடி நீர், ஆவியாகி விடுகிறது. மேலும், 2.10 லட்சம் கோடி கன அடி நீர், நிலவழியில் செல்லும்போது வீணாகிறது. ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய அளவில், 4.5 லட்சம் கோடி கன அடி நீர், வெள்ளம் காரணமாக, கடலில் சென்று கலந்து விடுகிறது.இவ்வாறாக, நமக்கு மீதம் கிடைப்பது, 3.3 லட்சம் கோடி கன அடி நீரே. இதிலும், 1.29 லட்சம் கோடி கன அடி நீர், புவியடி நீர் மறுவூட்டத்துக்கு போய்விட, நிலத்தின் மேற்பரப்பில் தற்போது பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீரின் அளவு, வெறும், 1.11 லட்சம் கோடி கன அடி. ஆக, இவை போக, மீதம் பயன்படுத்திக் கொள்ள சாத்தியமான அளவுக்கு, மேலும், 90 ஆயிரம் கோடி கன அடி நீர் இருக்கிறது.
இந்தியா முழுவதும் நதி நீர் இணைப்பு திட்டம் நிறைவேறினாலும், இந்தியா முழுமையிலும் உள்ள, 84 பெரிய அணைகளில், இரண்டு முறை வெள்ள நீரை தேக்கினாலும், 90 ஆயிரம் கோடி கன அடி தண்ணீருக்கு மேல் சேமிக்க முடியாது. இந்தியாவில், மழைப்பொழிவில் பாதியளவு, இரண்டு வாரங்களுக்கே நீடிக்கிறது. கிட்டத்தட்ட, 90 சதவீத நதி வெள்ளம் பெருக்கெடுத்தோடும் காலம், 3 முதல் 4 மாத காலங்களுக்கே நீடிக்கிறது. அதுவும், வெவ்வேறு கால கட்டங்களில் வரும் வெள்ளத்தால், இது சாத்தியப்படாமலேயே போனாலும் போகலாம். அப்படி என்றால், கடலில் கலக்கும், 4.5 லட்சம் கோடி கன அடிநீரை, எப்படி பயன்படுத்துவது? அதற்கு, 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் சாத்தியப்படக் கூடிய திட்டம் என்ன?
இந்தியாவில், ஒரு புதிய சிந்தனை எழுந்திருக்கிறது. அந்த மூன்றாவது தீர்வை, 'தேசிய அதி-திறன் நீர்வழிச்சாலை' என்று கூறலாம். இது தொடர்பான ஆராய்ச்சிகள் அனைத்தையும் மேற்கொண்ட பின், 'இந்தியாவுக்கான சரியான தீர்வு, தேசிய அதி-திறன் நீர்வழிச் சாலை திட்ட இயக்கம்' ஒன்றை துவங்குவதே' என, நாங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்.இந்த அமைப்பு, நதிகள், அணைகள், நீர்த்தேக்கங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இணைத்து, வெள்ளம் வரும்போது, நீரை அதில் ஏற்றி, பாய வைக்கும், வறட்சி காலங்களில், தேவையான மாநிலங்களுக்கு, அதிலிருந்து கொடுக்கும். நாட்டின் எந்த பகுதியில் நீர் பற்றாக்குறை இருந்தாலும், அவ்விடத்துக்கு இது செல்லும். இந்தியாவுக்கான அதி-திறன் நீர்வழிகள் குறித்த இந்த ஆய்வுக் கட்டுரை, இந்தியாவின் நீர் மேலாண்மை விவகாரத்தில், பல தலைமுறைகளுக்கு, எல்லா சூழல்களுக்கும், சாத்தியமான தீர்வு ஒன்றை முன்வைக்கிறது.
இந்தியாவுக்கான தேசிய அதி -திறன் நீர்வழி திட்டத்தின் தன்மைகள்:
ஏ.சி.காமராஜ் தலைமையிலான ஒரு குழு ஆராய்ந்து, முன்மொழிந்த திட்டமே, தேசிய அதி- திறன் நீர்வழி திட்டம். சரிவற்ற, நேரான (zero&slope)அமைப்புடன், ஒரு நீர்வழிச்சாலை முன்மாதிரி திட்டத்தை இந்த குழு, ஏற்கனவே உருவாக்கியுள்ளது.
தேசிய அதி- திறன் நீர்வழிச்சாலை பின்வரும் தன்மைகளை உடையது:
*கடல் மட்டத்திலிருந்து, 750 அடி உயரத்தில், ஒரே மட்டத்தில், சரிவற்ற நிலையில் நாடெங்கும், இந்த வழிச் சாலை கட்டப்படும்.
*இந்த நீர்வழிச் சாலை, நாடெங்கும் உள்ள ஆறுகள், அணைகள், நீர்ப்பிடிப்புப் பகுதிகள் ஆகியவற்றை, ஒற்றைத் தளத்தில், கிடை மட்டத்தில் இணைக்கிறது. இதற்குள் பாயும் நீர், அழுத்த வேறுபாடுகளின் காரணமாகவே பரவுகிறது.
*தேசிய அளவிலான இந்த நீர்வழிச் சாலை, போதுமான ஆழ, அகலங்களுடன் கட்டப்பட்டு, எந்த சமயத்திலும், 90 ஆயிரம் கோடி முதல் 1.80 லட்சம் கோடி கன அடி வரையிலான நீரை தேக்கி வைக்கும்படி, உறுதி செய்யப்படும்.
*நதிகளின் தலைப்பகுதிகளில் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஏற்படும் வெள்ளம், அணையில் நிரம்பும் வெள்ளம் ஆகியவை, இந்த தேசிய நீர்த் தேக்க அமைப்புக்கு, நீரைக் கொண்டு வரும்.
*இந்த நீர்வழிச்சாலை, 'தேவையான இடத்திற்கு, தேவையான அளவு' என்ற இணைப்பு அமைப்பை ஒத்திருப்பதால், பற்றாக்குறை இடத்திற்கு, நீர் கொண்டு செல்லப்படுவதும், வெள்ள காலத்தில், நீர் ஏற்றப்படுவதும் சாத்தியமே.
*வளைவுகள், கொடுவிளிம்புகள் அற்றவையாகவும், குறைந்த தளத் தடிமன் உடையவையாகவும், நீர்வழிச்சாலை இருக்கும். 24 மணி நேரமும், இதில் நீர்ப் போக்குவரத்து சாத்தியம். *இதில் சரக்கேற்றம், சரக்கிறக்கம் ஆகியவற்றை திறம்பட செய்யும் வசதிகளை வைக்க முடியும். நவீன நீர் போக்குவரத்து முறைகளையும், இங்கே பொருத்த முடியும்.இதன் மூலம் நீர்வழிப் போக்குவரத்து, நீர்ப் பாசனம், வேளாண் உற்பத்தித் திறன், நீர் மின்சக்தி, பல்துறை வேலை வாய்ப்புகள் பெருகும்.ரயில் போக்குவரத்தை விட, இரு மடங்கு செயல்திறனும்; சாலைப் போக்குவரத்தைவிட எட்டு மடங்கு செயல் திறனுமுள்ள நீர்வழி போக்குவரத்து, ஆற்றல் வளங்களை பாதுகாப்பதில், மிகப் பெரிய அளவு அரசுக்கு உதவும். சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு மீளும் செயல்பாடுகளுக்கும் வழிவகுக்கும். எனவே இதை, அரசு- - தனியார் கூட்டு முயற்சியாக மேற்கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாதது. இதில், மத்திய - -மாநில அரசுகள், கூட்டாக இறங்க வேண்டும்.
நதிநீர் இணைப்புத் திட்டத்தோடு ஒப்பிடுகையில், இந்தத் திட்டத்தில் நில ஆர்ஜிதம், மறுகுடியேற்ற சிக்கல் போன்ற பிரச்னைகள் உருவாவதற்கான வாய்ப்புகள், மிக மிக குறைவே. ஏனென்றால், இந்த நீர் வழிச்சாலை பெரும்பாலும் உயரமான மலைப்பகுதியில் அமைவதால், ஒரு ரோடு போடும் அளவு தான் நிலம் தேவைப்படும். எனவே, மக்கள் மறு குடியேற்றம் போன்ற பிரச்னைகள், பெரும்பாலும் இருக்காது. அகற்றப்படும் மரங்களை விட, இரண்டு மடங்கு மரங்களை உருவாக்கவும் வாய்ப்பு உருவாகும்.
இந்தியாவில் நீர் பிரச்னை, தொடர்ந்து மோசமாகி வருகிறது. 1951ல் இந்தியாவின் தனிநபர் நீர் கிடைப்பு அளவு, 15,531 கன அடியாக இருந்தது. இதுவே, 2011ல், 4,635 கன அடியாக, அதலபாதாளத்துக்கு சரிந்தது. இது, 2025ல், 4,020 கன அடியாகவும், 2050ல், 2,850 கன அடியாகவும் குறையும் என, புள்ளி விவரங்கள் கூறுகின்றன.ஆனால், மழைக் காலத்துக்குப் பிந்தைய நீர்த் தேவைக்காக, நீரை சேமிப்பது தொடர்பாக, இந்தியா இதுவரை, எதையுமே பெரிதாக செய்து விடவில்லை. அமெரிக்காவில் தனிநபர் ஒருவருக்கென கட்டி வைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க வசதியின் அளவு, 15 ஆயிரம் கன அடி. நடுத்தர வருவாய் நாடுகளான சீனா, மெக்சிகோ போன்ற நாடுகளில், 3,000 கன அடி.இப்படிப்பட்ட சூழல்களில், இந்தியாவின் நீர் தேக்க கொள்ளளவு திறனோ, தனி நபருக்கு, வெறும், 600 கன அடியாக உள்ளது.
தனிநபர் தேவைக்கான கொள்ளளவை, 2025ல், 7,500 கன அடியாகவும், 2050ல், 15 ஆயிரம் கன அடியாகவும் உயர்த்துவது எப்படி என்பது, சவாலாக இருக்கிறது.தமிழகத்தில், 17 பெரிய ஆற்று பாசனங்களும், 61 பெரிய மற்றும் சிறிய நீர் பாசன அணைகளும், 41,948 கண்மாய்கள், ஏரிகள் மற்றும் குளங்களும் உள்ளன. ஆண்டுதோறும், 13,962 கோடி கன அடி அளவு தண்ணீர் நிரம்பக்கூடிய வாய்ப்பு இருந்தாலும், அதில் பாதி கூட நிரம்புவதில்லை.
பெரும்பாலான மழையினால் கிடைக்கும் தண்ணீர் இருப்பை, முழுவதுமாக நாம் விவசாய தேவைக்கு ஏற்ப உபயோகப்படுத்தும் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு விட்டது. கிட்டத்தட்ட, 24 லட்சம் ஹெக்டேர் பாசன நிலம் பெரிய மற்றும் சிறிய நீர் அணைகளால் பாசன வசதி பெறுகிறது. 90 சதவீதம் நீர் விவசாயத்திற்கென்று உபயோகிக்கப்படுகிறது.ஆண்டுதோறும் உபயோகப்படக் கூடிய நீர், 67 ஆயிரம் கோடி கன அடி ஆக இருக்கிறது. அதில், 60 சதவீத நிலத்தடி நீர், மறு சுழற்சிக்கு சென்று விடுகிறது. 40 சதவீதம் நீர் மட்டும் நமது உபயோகத்திற்கு கிடைக்கிறது. கடந்த ஐந்து ஆண்டு காலங்களில், பாதுகாப்பான நிலத்தடி நீர் இருப்பு என்று சொல்லக்கூடிய பகுதிகளில், 35.6 சதவீதத்தில் இருந்து, 25.2 சதவீதமாக, நீர் குறைந்து விட்டது. அதே போல் பாதியளவு நிலத்தடி நீர் இருப்பு பகுதிகளில், மொத்தத்தில், 35.8 சதவீத நிலங்களில், அளவுக்கு அதிகமாக, நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விட்டது. 2 சதவீத நிலம், உப்புத் தன்மையானதாக மாறிவிட்டது.
ஏனென்றால் கடல் நீர் உள்ளே புகுந்ததாலும், ஆறு மற்றும் நிலத்தடி நீர் மாசு பட்டதாலும், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படாததாலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததாலும். மழைநீர் தண்ணீர் சேமிப்பு சரிவர செயல் படாததாலும், வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுகளால் மூடப்பட்டதாலும், இந்த நிலைமை ஏற்பட்டு விட்டது.
துறைவாரியாக தண்ணீர் தேவையும், பற்றாக்குறையும்
விவசாயத் துறை தான், தமிழகத்தின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் மிக முக்கிய துறையாகும். உணவு தேவையை சமாளிப்பதோடு மட்டுமல்லாமல், பெரும்பாலான மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் துறையாக விளங்குகிறது. விதைக்கப்படும் மொத்தப் பரப்பளவில், 46 சதவீதத்திற்குத்தான் நீர்பாசனம் உள்ளது. மீதம் உள்ள பரப்பளவு மானாவாரிதான். தண்ணீர் பற்றாக்குறையாலும், விவசாயத்திற்கு ஏற்ற விலையில்லாததாலும், விவசாய பொருட்களுக்கு ஏற்ற விலை கிடைக்காததாலும், விவசாயக் கூலி கட்டுபடியாகாததாலும், விவசாய உற்பத்திக்கு ஏற்ற இடங்கள், தொடர்ந்து நகரமயமாதலுக்கும், வீட்டு மனைகளுக்காகவும், தொழிற்சாலைகளுக்காகவும் பலியாகிவிட்டது.
உணவுப்பாதுகாப்புக்கு முக்கிய காரணியாக விளங்குவது தண்ணீர் இருப்புதான். தண்ணீர் ஒரு அரிதான பொருளாகிவிட்டது. மற்ற துறைகளான தொழில் துறை, நீர் மின்சார உற்பத்தி, வீட்டு தேவைகள், விலங்குகளுக்கும் மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்திற்கும் தண்ணீர் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
தமிழ் நாடு அரசின் தண்ணீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின்படி, பல்வேறு துறைகளுக்கு தேவையான தண்ணீர் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.மேற்கொண்ட துறைகளில் கூடுதல் தேவையாக (2012ம் ஆண்டைய கணக்கு) - 27 டி.எம்.சி / வருடம். ஆக மொத்தம் 1,921 டி.எம்.சி / வருடம் தேவைப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் மொத்த நிலத்தடி நீர் மற்றும் தரையில் இருக்கும் தண்ணீர் அளவு 1,643 டி.எம்.சி / வருடம். 2012 ம் ஆண்டு தேவையான கிட்டத்தட்ட 1,921 டி.எம்.சி என்பது, 2020ல், 2072 டி.எம்.சி.,யாக உயரும். அதாவது வருடா வருடம் 53 டி.எம்.சி பற்றாக்குறை ஏற்பட்டால், 2020ல், 429 டி.எம்.சி பற்றாக்குறை ஏற்படும்.
இதற்கு என்ன செய்யலாம்?
டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
வெ.பொன்ராஜ்
(தொடரும்)
-------------------------------------------------------------
2. தமிழக நதிகளை இணைத்தால் ஆண்டுக்கு ரூ.5,000 கோடி வருமானம்!
இந்தியாவில் நீர் ஒதுக்கீடு மற்றும் பெறுதல் ஆகியவற்றில் உள்ள வேற்றுமைகளை, தனிநபர் நீர் கிடைப்பு கணக்கீடுகள் உள்ளடக்குவதில்லை என்பதால், நீர் ஆதாரங்களை அளவிட, புதிய அளவுகோல்களை பயன்படுத்த வேண்டும் என, 'யூனிசெப்' மற்றும், 'புட் அண்டு அக்ரிகல்ச்சர் ஆர்கனைசேஷன்' ஆகியவை குறிப்பிடுகின்றன. இந்த வித்தியாசமே நீர் பெறுவது, பயன்படுத்துவது தொடர்பை தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது.
மோசமான நீர் பற்றாக்குறை பிரச்னைகள், விவசாயம், தொழில்துறைகளில் துவங்கி, வீடுகள் வரை பூசல்களை அதிகரிக்கிறது. நீர் வசதியில்லாத போது, சுகாதார வசதிகளை அமைப்பதிலும் பயன்படுத்துவதிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சில குழுக்களுக்கிடையில் பாதுகாப்பான குடிநீர், சுத்தம் ஆகியவற்றுக்கு வழி இல்லாதபோது, அது பொருளாதார, அரசியல், சமூக சமன்பாட்டு சீர் குலைவுகளையும், பாரபட்சங்களையும் உருவாக்குகிறது.எனவே, 2025 மற்றும் 2050ல் தேவைப்படும், தனிநபர் நீர் தேவைக்கான அளவை, உறுதி செய்யக்கூடியதாகவும், விவசாயத்திற்காகவும், நீர்பாசனத்திற்காகவும், தொழில்சாலைகளுக்கும், குடிதண்ணீருக்கும், தேசிய அதி-திறன் நீர்வழிச்சாலை திட்டத்தையே, நாம் வலுவாக நம்புகிறோம்; பரிந்துரைக்கிறோம். இந்த திட்டமே, நதிகள், அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகள் போன்றவற்றை நிரப்பி நீர்ப்பாசன வசதிக்கு உத்தரவாதம் அளிப்பதுடன், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி, மொத்த உள்நாட்டு உற்பத்தியை உத்தரவாதப்படுத்தும் தொழில்துறைக்கான தேவையையும் பூர்த்தி செய்கிறது.தற்போது நாட்டில், 50 சதவீத வீடுகளில் மட்டுமே முறையான கழிப்பறை, சுகாதார வசதிகள் உள்ளன. எனவே, நாட்டின் ஒட்டுமொத்த நீர்வழித் தடத்தையும் உருவாக்கி, இணைக்க, மாநில அளவிலான நீர்வழித் தடங்களை அமைப்பதற்கான திட்டங்களை, அந்தந்த மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி, பின் அவற்றை இணைக்க வேண்டும்.இத்தகைய நீர்வழிகளை கட்டி, இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த முடியுமா என கேள்விகள் எழலாம். இந்த உலகத்தில், நாங்கள் நேரில் கண்ட, ஆராய்ந்து பார்த்த, சில ஆற்றுப்படுகை மற்றும் நீர்வழிச்சாலை மற்றும் மேலாண்மைத் திட்டங்களை உங்கள் முன் உதாரணங்களாக வைக்க விரும்புகிறோம்.
ஓஹியோ அதி- திறன் நீர்வழிச் சாலைகள் : கடந்த,
1775ல், அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டனின்
உத்தரவுப்படி, அமெரிக்க ராணுவத்தின் பொறியாளர்கள் அணி உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பின் பிரதான செயல்பாடுகளாக, அதி- திறன் நதிவழி போக்குவரத்தை
உருவாக்குவது, நீர் மின்சக்தியை உற்பத்தி செய்வது ஆகிய பணிகள்
மேற்கொள்ளப்பட்டன.இத்திட்டத்தின் கீழ், 400க்கும் மேற்பட்ட பெரிய செயற்கை
ஏரிகள், நீர்த் தேக்கங்கள் (படல அமைப்பு கிணறுகள்), 8,500 மைல் நீள
நீர்வழிச்சாலைகள், கரைகள், நுாற்றுக்கணக்கான சிறிய அளவிலான வெள்ளக்
கட்டுப்பாட்டு அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில், 1.12 லட்சம் கோடி கன
அடி நீர் தேக்கப்படுகிறது. இவ்வாறே நாங்கள் கனடா, நெதர்லாந்து,
அயர்லாந்து, பிரேசில் நீர்வழி அமைப்புகளையும் ஆராய்ந்தோம்.கனடாவிலும்,
அமெரிக்காவிலும் நீர்வழிச் சாலைகள் இந்த இருநாட்டிலும், உள்நாட்டு,
வெளிநாட்டு வணிகத்துக்கான சரக்குப் போக்குவரத்தில் கணிசமான அளவுக்கு
நீர்வழிகள் பயன்படுத்தப்படுகின்றன. பார்க்க:http://www.britannica.com/EBchecked/topic/91513/Canada/43308/Waterways)
நெதர்லாந்து நீர்வழிகள் : மொத்தம், 6,000 கி.மீ., நீளமுள்ள நீர்வழிகளோடு, ஐரோப்பாவிலேயே விரிவான, மிகவும் அடர்த்தியான, நீர்வழி போக்குவரத்து அமைப்பை உடையது நெதர்லாந்து. நதிகளும் கால்வாய்களுமான இந்த அமைப்பில் சில, போக்குவரத்து வழிகளாகவும், வடிகால் வசதிகளாகவும், பிணைக்கப்பட்டுள்ளன. நாட்டின் எல்லா பகுதிகளிலும், இவை காணப்படுகின்றன. அயர்லாந்து நீர்வழிகள் கடந்த, 20ம் நுாற்றாண்டின் கடைசி, 15 ஆண்டுகளில், பழைய நீர்வழிகளை மீட்டெடுத்ததில் முதலிடம் அயர்லாந்துக்கு தான்.
பிரேசில் நீர்வழிகள்: பிரேசில் நீர்வழிகளின் பயன்பாட்டுத்திறன் மிக அதிகம். என்றாலும், 60 ஆயிரம் கி.மீ., நீளமுள்ள பிரேசில் நீர்வழிகளில், 13 ஆயிரம் கி.மீ., அளவுக்கே, தற்போது பயன்படுத்தப்படுகின்றன. வேளாண், கனிம பொருட்கள் மட்டுமே நீர்வழிகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன.. அமேசானில், 6,280 கி.மீ., துார நீர்வழியானது, உலகின் மிக வேகமான நீர்வழியாகும். இது, பலநாடுகள் வழியாக செல்கிறது. பிரேசில், பெரு, ஈக்வடார், கொலம்பியாவிலிருந்து அமேசானின் நீர்முகங்கள் மூலமாக நீர் வருகிறது. (Ref: http://www.wwinn.org/brazil-inland-waterways)
ஜெர்மனியில் மக்தேபர்க் நீர்ப் பாலம் : ஜெர்மனியில் உள்ள மக்தேபர்க் நீர்ப்பாலம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இது 2003 அக்டோபரில் திறக்கப்பட்டது. 918 மீட்டர் உயரமுள்ள இது, உலகின் மிக நீளமான போக்குவரத்து சாத்தியமுள்ள, நீர் வழிச்சாலையாகும்.
தாய்லாந்து : இங்கு,
மலையை குடைந்து, ஒரே தட்டில் நேர்வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு,
எவ்வாறு மலையை குடைந்து சாலை உருவாக்கப்படுகிறதோ, அதைப் போலவே,
இந்தியாவின் தேசிய அதி-திறன் நீர்வழிகள், மலைகளை எங்கெல்லாம்
சந்திக்கிறதோ, அங்கெல்லாம், 750 அடி கடல் மட்டத்திற்கு மேல், சரிவின்றி
குடையப்பட்டு, நீர்வழிச் சாலை அமைக்கப்படும். இந்தியாவில் தற்போது, 4,332
கி.மீ., உள்நாட்டு நீர்வழிகள் உள்ளன. இதை, தேசிய நீர்வழி என, அரசு
பிரகடனப்படுத்தியிருக்கிறது. இதில், கங்கை, 2,592 கி.மீ., நீளம் கொண்டது.
இதன் மூலம், ஓராண்டுக்கு, 7 கோடி டன் பொருட்கள் எடுத்துச்
செல்லப்படுகின்றன. இந்தியாவின் மிகப்பழைய சரக்கு போக்குவரத்து முறைகளில்
ஒன்று நீர்வழிப் போக்குவரத்து. ஆனால், இது இங்கே பிரபலமாகவில்லை.
இந்தியாவில் எப்படி?
கோவா : நீரேற்றுக் குழாய்கள் மூலமாகவும், புவி ஈர்ப்பு சக்தி மூலமாகவும் இயங்கக் கூடிய வசதிகளைக் கொண்டு, மந்தோவி படுகையில், சுவாரி நதியையும், கலாய் நதியையும் இணைத்திருப்பதாக கோவா முதல்வர் என்னிடம் தெரிவித்தார். தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமலிருக்க இதை உறுதிப்படுத்த வேண்டியிருந்ததாக அவர் கூறினார்.இந்த வகையில் நதிகளை இணைக்க வேண்டும் என, ஒவ்வொரு மாநிலமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குஜராத் : இந்தப் பத்தாண்டு கால திட்டத்திற்கான நிதியை ஒதுக்குவதும் சாத்தியமே. இதன் மதிப்பு, 50 ஆயிரம் கோடி ரூபாய். மின்சக்தி திட்டங்கள், நீர்வழி நீர்த்தேக்கங்கள், அணைகள் அனைத்தும் இதில் அடங்கும். ஆண்டுக்கு, 10 ஆயிரம் கோடிக்கும் குறைவான பணத்தை, தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கி, கூடுதலாக மத்திய அரசு மற்றும் உலக வங்கி நிதி ஆதரவு இருந்தால், 5 முதல் 7 ஆண்டுகளில் இதைக் கட்டி விடலாம்.தமிழக நீர்வழிப் பாதை இணைப்பு இயங்கத் துவங்கினால், ஓராண்டுக்கு 5,000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். இதில், மின் சக்தி ஆதாயம், 2,350 கோடி ரூபாய்; போக்குவரத்து ஆதாயம், 1,450 கோடி; குடிநீர், மீன்வளம், சுற்றுலா ஆதாயங்கள் மூலம், 1,200 கோடி ரூபாய் கிடைக்கும்.வனவளர்ப்பு, நீர்மின்சக்தி பயன்பாடு, எரிபொருள் குறைந்த போக்குவரத்து ஆகியவற்றால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மேம்பாடு, மிகவும் முக்கியமானது இந்த திட்டத்தை, உலக வங்கி நிதியுதவியுடன், BOOT முறையில் (கட்டு, -இயக்கு,- உரிமை கொள், -பின்பு மாற்று) நடைமுறைப்படுத்த முடியும்.இந்த திட்டம், பல் துறை சார்ந்தது. எனவே, சிவில் பொறியாளர்கள், நீர் நிபுணர்கள், இயந்திரவியல் நிபுணர்கள், தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணுவியல் நிபுணர்கள், மண்ணியலாளர்கள், வரைபடவியலாளர்கள், தொலையறிதல் நுட்பர்கள், தொழில் மேலாண்மை நிபுணர்கள் என, பலருக்கும், சவால்களும், பெரும்பாலான மக்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படும்.தேசிய அளவிலான நீர்வழிகள் உருவான பின், இது, அவற்றோடு இணைக்கப்பட்டால், அதன் வழி வரும் ஆதாயங்கள் மிக முக்கியமானவை.
இது, 71 சதவீதம் நீர்ப் பற்றாக்குறை கண்ட மாநிலம். மாநிலத்தில், 29 சதவீத பரப்புள்ள, தெற்கு மற்றும் மத்திய குஜராத், நீர் மிகை பகுதியாக உள்ளதால், நதிகளை இணைக்கும் முயற்சியை, குஜராத் அரசு மேற்கொண்டு, இப்போது முதல் இணைப்புப் பணி முடிந்திருக்கிறது.நர்மதா வெள்ளப் பெருக்கின் போது வழிகிற நீரை, நர்மதா பிரதான வாய்க்கால் ஒன்றின் மூலம் திசை திருப்பி, ஹேரன், ஓர்சாங், கரத், மகி, சைதக், மோகர், வத்ரக், சபர்மதி, காரி, ரூபன், பானாஸ் ஆகிய ஆறுகளோடு இணைப்பதே அந்த திட்டம். இதன் மூலம், 700 சிறிய மற்றும் பெரிய கிராம நீர்த்தேக்க அமைப்புகளும், குளங்களும் நிரம்பும். இந்த இணைப்பானது, சரஸ்வதி ஆற்றுக்கான, 'தாரோய்' திட்டத்தின் வலக்கரை பிரதான வாய்க்காலின், முதல் கிளை வாய்க்காலிலிருந்து பிரிகிறது. இதன் காரணமாக, இந்த மாநிலம், வேளாண்மையில், 9 சதவீத வளர்ச்சி கண்டு விட்டது.மற்ற மாநிலங்களும், இதுபோன்ற வளர்ச்சி காண வேண்டும்.
தமிழக நதிகள் இணைப்பு
தமிழக நதிகளை இணைப்பது குறித்து, இப்போது பார்ப்போம்.மேட்டூர் அணை வெள்ளத்தால் நிரம்பும் ஒவ்வொரு முறையும் மீதமுள்ள நீர், கடலில் கலக்கிறது. ஒவ்வோராண்டும், மேட்டூரிலிருந்து கடலில் கலக்கும் நீரின் அளவு, சராசரியாக 60 டி.எம்.சி., எனவே, கடந்த எட்டாண்டுகளில், 400 டி.எம்.சி., நீர், தடுப்பணைகளோ நீர்த்தேக்க வசதிகளோ இல்லாத காரணத்தால், கடலில் சென்று சேர்ந்தது.கடந்த, 2005 வெள்ளத்தின் போது, 3.23 லட்சம் கனஅடி நீரை, கொள்ளிடம் ஆறு வெளியேற்றியது. ஒரு கி.மீ., அகலமும் 160 கி.மீ., நீளமும் உள்ள கொள்ளிடம் ஆறு, ஒரு நீர்த்தேக்கத்தைப் போல செயல்பட்டது. அதிக வெள்ளத்தை ஏற்கும் திறன், ஒரு வெள்ளப் போக்கு நீர்வழிக்கு இருக்க வேண்டும் என்பதை, கொள்ளிடம் காட்டியது. அதாவது ஒரு ஆற்றினை வெள்ள ஏற்பு வாய்க்காலாக மாற்றும்போது, நாம் நிறைய நீரை தேக்கி வைக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
பேராசிரியர் ஏ.சி.காமராஜ் குழுவினரும், வி.பொன்ராஜும் உருவாக்கிய, 'தமிழ்நாடு அதி -திறன் நீர்வழி திட்டத்தை' தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமும், முன்னால் முதல்வர் கருணாநிதியிடமும், அவரவர் ஆட்சிக் காலத்தில் சமர்ப்பித்தோம். அவர்கள் நீர்ப் பிரச்னை குறித்த கவலை கொண்டு, சில நடவடிக்கைகளை எடுத்தனர். ஆனால், திட்டத்தைத் துரிதப்படுத்த முனையவில்லை.தமிழக நீர்வழிகள் சாலைத் திட்டம் புதுமையானது. இது நீர் சேகரிப்பாகவும் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைப்பாகவும் இணைந்து செயல்படுகிறது. இருவழிகளில் நீர் செல்லவும் ஆற்றுப்படுகைகளுக்கிடையில் ஏற்கனவே உள்ள அமைப்புகளின் மீது, பாதிப்பின்றி இணைப்புகளை மேற்கொள்கிறது.பின்வரும் அணைகளை இது இணைக்கிறது: சாத்தனுார், மேட்டூர், பவானி சாகர், வைகை, மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, சோலையாறு, பாபநாசம், சேர்வலாறு. அத்துடன் பல ஏரிகளையும் பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், வீராணம், ராமநாதபுரம் ஏரிகளையும் இணைக்கிறது. மேற்கு நோக்கி பாயும் ஆறுகளும் தமிழக நீர்வழி கிரிடில் இணைக்கப்படுகிறது. ஒரே கிடைமட்டத்தில் வரும்படியாக இது கடல் மட்டத்துக்கு மேல் 250 மீட்டர் உயரத்தில் கட்டப்படும். இணைப்பின் எந்தப் பகுதியிலிருந்தும், நீரை ஏற்றவோ, இறக்கவோ முடிகிற வகையில் அணைகளையும், ஏரிகளையும் இது இணைக்கிறது. ஆறுகள் முழுவதுமே, தமிழக நீர்வழிப் பாதையுடன் இணைக்கப்படுகின்றன.இந்த திட்டத்தை, ஐந்து கட்டங்களாக நடைமுறைப்படுத்த முடியும் என, பூர்வாங்க ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
*முதல் கட்டத்தில், மேட்டூரும், வைகையும், 350 கி.மீ., நீள நீர்வழியால் இணைக்கப்படலாம்.
*இரண்டாம் கட்டத்தில், மேட்டூரையும், பாலாறையும், 270 கி.மீ., துாரத்தில் இணைக்கலாம்.
* மூன்றாம் கட்டத்தில், 130 கி.மீ., நீள வழியில், வைகையையும், தாமிரபரணியையும் இணைக்கலாம்.
*நான்காம் கட்டத்தில், தாமிரபரணியையும், பெருஞ்சாணியையும் இணைக்கலாம்.
*ஐந்தாம் திட்டமாக, சம காலத்தில், ஆறுகளையும், ஏரி, -துணை ஆறுகளையும், ஆங்காங்கே இணைக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், இது, அந்தந்த படுகைகளில் பயன்படுத்தப்படும் நீரை இணைப்பதில்லை; மாறாக உபரி நீரைமட்டுமே இணைக்கிறது. அதுவும், இரு வழிகளில் இணைக்கிறது. இதில் எங்கும், நீரேற்றும் வசதி பயன்படுத்தப்படவில்லை.இதைப் பத்தாண்டுகளுக்குள் நிறைவேற்ற முடியும்.
பலன்கள் : இந்தத் திட்டத்தால் மாநிலத்துக்கு பின்வரும் பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: திறமையான வெள்ளக் கட்டுப்பாடு; கூடுதலாக; 75 லட்சம் ஹெக்டேருக்கு நீர்ப்பாசன வசதி; கூடுதலாக, 2,150 மெகாவாட் நீர்மின்சக்தி; நிலத்தடி நீர் மட்ட உயர்வால், ஆண்டுக்கு, 1,350 மெகாவாட் மின்சக்தி மிச்சமாதல்; சரக்குப் போக்குவரத்துக்காக, 900 கி.மீ., நீள நீர்வழித்தடம்; 30 அடி ஆழமும், 360 அடி அகலமும் உள்ள நீர்வழியில், ஆண்டு முழுக்க போக்குவரத்து நடக்கலாம்; சாலைகளோடு ஒப்பிடுகையில், நீர்வழிப் போக்குவரத்துக்கான எரிபொருளில், 90 சதவீதம் மிச்சமாகும்; அத்துடன் நீர்வழி கிரிடிலிருந்து, 5 கோடி பேருக்கு, நேரடி குடிநீர் இணைப்பைச் சாத்தியமாக்கலாம்; மீன்வளர்ப்பு, சுற்றுலா, நீர் விளையாட்டுகள் என, பல கூடுதல் வாய்ப்புகள் இருக்கின்றன.
திட்டக்கணிப்ப : இந்தப் பத்தாண்டு கால திட்டத்திற்கான நிதியை ஒதுக்குவதும் சாத்தியமே. இதன் மதிப்பு, 50 ஆயிரம் கோடி ரூபாய். மின்சக்தி திட்டங்கள், நீர்வழி நீர்த்தேக்கங்கள், அணைகள் அனைத்தும் இதில் அடங்கும். ஆண்டுக்கு, 10 ஆயிரம் கோடிக்கும் குறைவான பணத்தை, தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கி, கூடுதலாக மத்திய அரசு மற்றும் உலக வங்கி நிதி ஆதரவு இருந்தால், 5 முதல் 7 ஆண்டுகளில் இதைக் கட்டி விடலாம்.தமிழக நீர்வழிப் பாதை இணைப்பு இயங்கத் துவங்கினால், ஓராண்டுக்கு 5,000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். இதில், மின் சக்தி ஆதாயம், 2,350 கோடி ரூபாய்; போக்குவரத்து ஆதாயம், 1,450 கோடி; குடிநீர், மீன்வளம், சுற்றுலா ஆதாயங்கள் மூலம், 1,200 கோடி ரூபாய் கிடைக்கும்.வனவளர்ப்பு, நீர்மின்சக்தி பயன்பாடு, எரிபொருள் குறைந்த போக்குவரத்து ஆகியவற்றால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மேம்பாடு, மிகவும் முக்கியமானது இந்த திட்டத்தை, உலக வங்கி நிதியுதவியுடன், BOOT முறையில் (கட்டு, -இயக்கு,- உரிமை கொள், -பின்பு மாற்று) நடைமுறைப்படுத்த முடியும்.இந்த திட்டம், பல் துறை சார்ந்தது. எனவே, சிவில் பொறியாளர்கள், நீர் நிபுணர்கள், இயந்திரவியல் நிபுணர்கள், தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணுவியல் நிபுணர்கள், மண்ணியலாளர்கள், வரைபடவியலாளர்கள், தொலையறிதல் நுட்பர்கள், தொழில் மேலாண்மை நிபுணர்கள் என, பலருக்கும், சவால்களும், பெரும்பாலான மக்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படும்.தேசிய அளவிலான நீர்வழிகள் உருவான பின், இது, அவற்றோடு இணைக்கப்பட்டால், அதன் வழி வரும் ஆதாயங்கள் மிக முக்கியமானவை.
டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
வெ.பொன்ராஜ்
(தொடரும்)
-------------------------------------------------------------------------
3. நீர்வழி திட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்போம்!
கடந்த இரு நாட்களாக, இந்தியாவின் நீர் பயன்பாடு மற்றும் தமிழக ஆறுகளை எவ்வாறு இணைக்கலாம் என்பது குறித்து பார்த்தோம்.இனி, தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களையும் உள்ளடக்கக் கூடிய தென்னக இணைப்பை, எப்படி உருவாக்குவது எனப் பார்ப்போம்.
இந்த மாநிலங்கள் அனைத்தும், கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, தாமிரபரணி, முல்லைப் பெரியாறு, வைகை, பாலாறு ஆகிய ஆறுகளையே, நீர்பாசனத்துக்கு பெரிதும் சார்ந்திருக்கின்றன.
வெள்ளம் ஏற்படும்போது, இம்மாநிலங்களில், நீருக்கு பிரச்னை இருப்பதில்லை. 30, ஜனவரி 2013 அன்றைய மத்திய நீர் ஆணையத்தின் தரவுகளின்படி, தென்னிந்திய ஆறுகளின் மொத்த நீர் கொள்திறன், 15 ஆயிரத்து 300 கோடி கன அடி தான். அவற்றில், தற்போதுள்ள நீர் சேகரிப்பு இடங்கள் அனைத்தும் சேர்ந்து, 4,800 கோடி கன அடி நீரை மட்டுமே, தேக்கக் கூடிய வசதிகளைக் கொண்டிருக்கின்றன.
மாநிலங்களின் நீர்த்தேக்க அளவு
ஆனால், வெள்ளப் பெருக்கின்போது, கோதாவரி, கிருஷ்ணா நதிகளில் மட்டும், 2,000 - -3,000 டி.எம்.சி., நீர் ஆந்திராவின் அணைகள், நீர்த் தேக்கங்கள், ஏரிகள் ஆகியவற்றை நிரப்பிய பிறகும், கடலில் சென்று கலக்கிறது. அதே நேரத்தில், தெலுங்கானாவில் பல பகுதிகளில், நீர்ப்பற்றாக்குறை நிலவுகிறது.வறட்சி பருவங்களில், தென் மாநிலங்கள் அனைத்துமே வறண்டு விடுகின்றன. இந்தப் பிரச்னை, மாநிலங்களில் அரசியல் மயமாகிறது. அரசுகளும், கட்சிகளும், கடுமையான நிலைப்பாடுகளை எடுத்து, மாநிலங்களுக்கிடையில் பதற்றத்தை உருவாக்குகின்றன. முன் முடிவுடன் இந்தப் பிரச்னையை அணுகினால், பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பம் அமையாமல் போய் விடும்.நீதிமன்ற வழக்குகள், தீர்ப்பாய முடிவுகள், கோரல்கள், எதிர்கோரல்கள் என, இந்தப் பிரச்னைகள் நீள்வதால், நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் போகும் நிலை ஏற்படுகிறது. நீதிமன்ற உத்தரவை நிராகரிக்கும் முடிவுகள், சட்டமன்ற தீர்மானங்கள் மூலம் எடுக்கப்படுகின்றன.மோசமான நீர் மேலாண்மை காரணமாக ஏற்படும் இந்தநிலை, குழப்பத்துக்கு காரணமாகி, யாருக்கும் எந்த மாநிலத்துக்கும், நன்மை உருவாக்கக் கூடிய வாய்ப்பையும் கெடுக்கிறது. இறுதியாக, எல்லா மாநிலங்களிலும் உள்ள விவசாயிகளும், மக்களுமே பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையை தவிர்க்க, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக மாநிலங்களில் உருவாகும் வெள்ளப் பெருக்கை, அதி -திறன் நீர்வழிகளில் செலுத்தி, சேகரித்து, வறட்சி ஏற்படும் போதெல்லாம் பகிர்ந்து கொள்ளலாம். ஆந்திர பிரதேச அதி -திறன் நீர்வழிகளும், தமிழக அதி -திறன் நீர்வழிகளும் ஒரே மட்டத்தில் இணையக் கூடியவையாகவும், தமிழக - -ஆந்திர எல்லையில், வேலுார் அருகே இணையக் கூடியதாகவும் இருக்கின்றன. கட்டுக்கடங்காத வெள்ளப் பெருக்கையும், இந்த இணைப்பு தவிர்க்கும். வெள்ள காலத்தில், 3,000 முதல் 4,000 டி.எம்.சி., நீரை, தென்னக நீர்வழி இணைப்பு பெற முடியும். இது, எல்லா பருவ காலங்களிலும், எல்லா மாநிலங்களுக்குமான தேவையைப் பூர்த்தி செய்யும்.
ஆந்திரா: ஆந்திராவில்,
வெள்ளப் பெருக்கு காலத்தில், 2,500 டி.எம்.சி., நீரையும், வழக்கமான
மழைக் காலத்தில், 750 டி.எம்.சி., நீரையும், கோதாவரி ஆறு கடலுக்கு
அனுப்புகிறது. இந்த நீரைச் சேமிக்க, நீர்ப் பாசன வாய்க்கால்களும் ஏரி,
குளங்கள் உள்ளிட்ட நீர்த்தேக்க நிலைகளையும் உருவாக்க வேண்டும். இதன்
மூலம், கோதாவரி படுகையில், வேளாண் நிலங்களின் பரப்பு, 30 சதவீதம்
அதிகரிக்கும்.மின் இணைப்பு போல, நீர் வழிகளிலும் இரண்டு திசைகளிலும், நீர்
செல்லும். கோதாவரியிலிருந்து காவிரிக்கும், காவிரியிலிருந்து
கோதாவரிக்கும், நீர் பரிமாற்றம் சாத்தியமாகும். அதே சமயத்தில், தற்போதுள்ள
எந்த நீர்த் திட்டத்தையும் இது பாதிக்காது. எந்த இடத்திலும், 'பம்ப்பிங்'
மூலம் நீரை ஏற்றுவது கிடையாது. இதை, பொதுத்துறை- - தனியார் துறை
கூட்டு முயற்சியாக செய்தால், அரசு செலவிடத் தேவையில்லை. 5 முதல் 7
ஆண்டுகளில், இந்தத் திட்டத்தை முடித்து விடலாம். இந்தத் திட்டத்தால்,
10 கோடி பேருக்கு, தடையற்ற நீர் வழங்கல் சாத்தியமாகும். இது, ஆந்திராவில்,
3.1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கும். அந்த மாநிலத்தில், 1.75
கோடி ஏக்கர் நிலம், கூடுதலாக நீர்ப்பாசன வசதி பெறும். இதன் மூலம்
ஆண்டுக்கு, 5,000 மெகாவாட் மின்சாரம், சுற்றுச்சூழல் மாசுபாடு இன்றி
கிடைப்பதுடன், நிலத்தடி நீர் மேலேற்றம் காரணமாக, 2,850 மெகாவாட்
மின்சாரம் மிச்சமும் ஆகும்.எனவே, மொத்தமாக, 7,290 மெகாவாட் நீர்
மின்சக்தி நமக்கு கிடைக்கிறது. கூடுதல் மீன் வளர்ப்பு, சுற்றுலா, நீர்
விளையாட்டு வசதிகளும் கிடைக்கின்றன.ஆந்திராவையும் தமிழகத்தையும் இணைத்து
பார்க்கையில், 2,000 கி.மீ., நீள, நீர் வழி அமைகிறது. எனவே, இந்த நீர் வழி,
இரு மாநிலங்களுக்கும், சம அளவில் ஆதாயமாகும். குடிநீர், மின்சாரம்,
நீர்ப்பாசனம், போக்குவரத்து என, எல்லாவற்றுக்கும், இரு மாநிலங்களுக்கும்,
இந்தத் திட்டம் பயனளிக்கும்.
கேரளா, கர்நாடகா : இந்த
முறையிலேயே, கேரளாவும், கர்நாடகமும், அதி -திறன் நீர்வழிகளை
உருவாக்கலாம். புதுவை உட்பட, தென்னகம் முழுவதிலும், 4,000 டி.எம்.சி.,
நீரை, இவ்விதமாக பகிர்ந்து கொள்ளலாம். எல்லா மாநிலங்களிலும், நீர்த்
தேக்கங்களில் நீர் நிரம்பியிருக்க, இரண்டு போகம் விவசாயம் செய்ய
முடியும்.
எல்லா மாநிலங்களுக்கும் வெற்றியே
பேராசிரியர் ஏ.சி.காமராஜும் அவரது அணியினரும், இத்திட்டம் பற்றி, எல்லா மாநில அரசுகளுக்கும் எடுத்துரைத்திருக்கின்றனர். தங்களுடைய நலன் பாதிக்கப்படாமல், அதே சமயம் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கிறது என்பதாலும், தங்களுடைய இருப்பு நீரை இழக்காமல், கடலில் வீணாக கலக்கும் வெள்ள நீரையே கூடுதலாக பெறப் போகின்றனர் என்பதாலும், இம்மாநிலங்கள், இதில் ஆர்வம் காட்டின.
சாத்தியமுள்ள தீர்வு: தேசிய அதிதிறன் நீர்வழிகள் கிரிடு
இந்த நீர் இணைப்பு, 15 ஆயிரம் கி.மீ., நீள, தேசிய நீர்த் தேக்க அமைப்பாக மாறும். 60 கோடி பேருக்கு, குடிநீரை வழங்கும்; 15 கோடி ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசனத்தை வழங்கும்; 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். நிலத்தடி நீர் மட்டத்தை, 'ரீசார்ஜ்' செய்வதால், 4,000 மெகாவாட் மின்சாரத்தை மிச்சப்படுத்தவும் முடியும்.சாலைப் போக்குவரத்துடன் ஒப்பிடுகையில், 10 முதல் 20 சதவீத அளவே செலவாகும், நீர்வழிப் போக்குவரத்து, இதன் மூலம் சாத்தியமாகி, அனைத்து மாநில அளவில், ஓராண்டுக்கு, 1.5 லட்சம் கோடி எண்ணெய் உற்பத்தி குறையும்.இத்திட்டத்தை நிறைவேற்ற, ஒவ்வொரு மாநிலமும், 6 - 7 ஆண்டுகளுக்கு, ஒட்டுமொத்தமாக, 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.ஏற்கனவே, சொன்னது போல், BOOT முறையில் இதை அமல்படுத்தினால், பத்தாண்டுகளுக்குள் இதை முடித்து விடலாம். மத்தியில், தீர்க்க தரிசனம் மிக்க தலைமை இருந்ததால், தங்க நாற்கரம் என்ற மிகப் பெரிய, நல்ல திட்டம் எப்படி சாத்தியமாயிற்றோ, அந்த வகையில், இதுவும் சாத்தியமாகும். அதற்கான லட்சிய நோக்கம், நமக்கு வேண்டும்.
அதிதிறன் நீர்வழி திட்டம் பொருளாதாரத்தைப் பெருக்கும்
கடந்த, 2010, செப்டம்பரில், நாங்கள் கனடா நாட்டிற்கு சென்றிருந்தபோது, இரு நாடுகளின் பிரதான செய்திறன்களின் அடிப்படையில், குறைந்த பட்சம், இரண்டு மாநிலங்களிலாவது (தமிழகம், பீகார்) பொதுத் துறை- - தனியார் துறை நிதி முதலீட்டுடன், இத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதித்தோம். கனடா அரசும், அதன் தொழிற்துறையும், தம் ஆர்வத்தை வெளிப்படுத்தின.இந்த பயணத்துக்கு பின், இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், மத்திய - மாநில அரசுகளின் நிபுணர் குழு ஒன்று அமைக்கும்படி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினேன். இத்திட்டம் தொடர்பாக, இதன் பிரதான கர்த்தாவான, ஏ.சி.காமராஜுடன் இணைந்து, கனடாவிலிருந்து வந்த பிரதிநிதிகள் குழு ஒன்று, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் செயலர்களையும் அதிகாரிகளையும், மத்திய அரசையும் சந்தித்தன.மேலும், கனடா - இந்தியா பவுண்டேஷனும், இது பற்றி விவாதித்து வந்தது. அவர்கள் என்னிடம் வைத்த வேண்டுகோளுக்கு இணங்க, பொன்ராஜும் கூடுதல் விவாதத்துக்காக நியமிக்கப்பட்டார். தமிழக அரசுக்கும் உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்துக்கும், இத்திட்டம் பற்றி ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தோம். தங்கள் மாநிலங்களில், இத்திட்டம் குறித்த சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு பீகார், ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகியவற்றுக்கும் வலியுறுத்தியிருந்தோம்.மத்திய அரசு, உள்நாட்டு நீர்வழி ஆணையம் ஆகியவை, தேசிய அதி- திறன் நீர்வழிச் சாலை இணைப்பை உருவாக்க தேவையான ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும். இந்த திட்டமானது, இந்திய தொழில்துறை, கல்வித்துறை ஆகியவற்றுக்கு வலுசேர்க்கும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மேலாண்மையியல், மனிதவியல் துறைகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு, நல்ல மதிப்புடனான வேலையை உருவாக்கும். பல்வேறு நாடுகளுடன் இந்தியா, இதன் மூலம் மேற்கொள்ளும் உறவு, இரு தரப்பினருக்குமே பலன் தரும்.
பொருளாதாரத்தை வலுப்படுத்தும் தேசிய அதிதிறன் நீர்வழிகள்
முடிவுரை
நம் நாட்டில், மகத்தான இயற்கைச் செல்வங்களும் பேரளவுக்கான நீர் ஆதாரங்களும், எல்லையற்ற சூரிய வெளிச்சமும் கிடைக்கின்றன. இவற்றை, நாம், ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதில்லை. எனவே, பாதுகாப்பான குடிநீருக்காகவும் நிலக்கரிக்காகவும், பெட்ரோலிய பொருட்களுக்காகவும், இரும்பு தாதுக்காகவும், சூரிய ஒளி பேனல்களுக்காகவும், நாம் அன்னிய நாடுகளைச் சார்ந்திருக்கிறோம்.நாம் நம் இயற்கை வளங்களான, கிரானைட்களையும் கனிமங்களையும் ஏற்றுமதி செய்து, அவற்றுக்கு வெளிநாட்டில் வைத்து மதிப்பு கூட்டி, பின் இந்தியாவுக்கு இறக்குமதி செய்து கொள்கிறோம். அந்த மதிப்புக் கூட்டுப் பணியை, இந்தியாவிலேயே செய்வதற்காக, இந்திய தொழில் துறைக்கு, நாம் ஊக்கமளிப்பதில்லை. அதற்கான முன்முயற்சி சார்ந்த, உள்ளடக்குகிற கொள்கைகள் நம்மிடமில்லை. பிரிட்டிஷ்காரர்கள், இந்தியாவை ஆக்கிரமித்தபோது, என்ன நடந்ததோ, அதுவே இப்போதும் நடக்கிறது.வளர்ச்சிக்கு தேவையான உள்ளடங்கு கொள்கைகளை முன்முனைந்து அமல்படுத்தாமல், இந்திய நிறுவனங்களுக்கு, சம மட்டத்திலான செயல்திறனை உறுதிப்படுத்தாமல், நாம் இந்தியாவின் உற்பத்தி சார்ந்த முக்கிய துறைகளை, பாதுகாப்பற்ற நிலையில் வைத்தபடியே, அத்துறைகளை தாராளமயமாக்கி விட்டோம்.எனவே, உலகளாவியப் போட்டிக்கு முன்னால், புதிய தொழில்நுட்பங்கள் இல்லாத, நிதி ஆதார பலம் இல்லாத, திறன் தொழிலாளர்கள் இல்லாத, நம் உள்நாட்டு நிறுவனங்கள், முதலில் வீழ்ச்சி அடைந்தன; பின், இழுத்து மூடப்பட்டு விட்டன.நம் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, பிரதான செய்திறன் துறைகளை, நாம் உள்ளடங்கு கொள்கைகளோடு மேம்படுத்தியிருந்தால், உலகப் போட்டியை சமாளிக்கும் திறனை, நம் தொழில் துறையினருக்கு அளித்திருக்க முடியும். நிலைபெறு நீர், மின்சாரம், உள்கட்டமைப்பு, வேளாண்மை இல்லையேல், நிலைபெறு செல்வமும் செழிப்பும் இல்லை. எனவே, முதலில் நீர் மீது கவனம் குவிப்போம்.'நாம், நிலைபெறு வளர்ச்சிக்காகவே நிற்கிறோம்; எனவே இதை முதலில் நடைமுறைப்படுத்துவோம்' என, மக்களிடம் நாம் உறுதி கொடுக்க வேண்டும். தனி மனிதர்களை விட, நாடு முக்கியம் என்பதை சூளுரையாக ஏற்க, தேசத்தின், மாநிலங்களின், புதுமை நாடும் தலைவர்களை வலியுறுத்துவோம். தேசிய மற்றும் மாநில அளவிலான அதி- திறன் நீர்வழித் திட்டத்தை அமல்படுத்த, முன்னுரிமை கொடுக்கச் சொல்வோம். தேசிய அதி- திறன் நீர்வழி இணைப்புத் திட்டத்தின் வளர்ச்சியே, நாட்டின் நிலைபெறு வளர்ச்சிக்கு நம்மை அழைத்துச் செல்லும்!
டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் (apj@abdulkalam.com)
வெ.பொன்ராஜ் (vponraj@gmail.com)