குளிரடிக்கும் காலை; குன்னூர் பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து மேட்டுப்பாளையம் கிளம்புகிறது அந்த அரசு பஸ். வேகமாய் ஓடி வந்து நாலு பேர் பஸ் ஏற, "ஏங்க, இவ்வளவு அவசரம், அடுத்த பஸ்ல வரலாமே' என்றால், "இதுல போனாத்தான் இன்னிக்கு நாளு நல்லாயிருக்கும்,' என்று புதிர் முடிச்சுப் போட்டார்கள். அவர்கள் முடிப்பதற்குள் ஒரு கணீர்க்குரல்...
""அன்பார்ந்த பயணிகளுக்கு இனிய காலை வணக்கம். உங்களின் பயணம் இனிமையாக அமையவும், நினைத்துக் கொண்டிருக்கும் காரியங்கள் நிறைவேறவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இனிய வாழ்க்கைக்கு, போதை வஸ்துகளை தவிர்க்க வேண்டும்; முடிந்த அளவுக்கு மரக் கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்திடுங்கள், பெரியோரை மதிப்போம்; பெற்றோரை பேணுவோம்; ரத்தானம் செய்வோம்...''என்று தொடர்கிறது அந்த உரை. நிகழ்த்துவது அந்த பஸ்சின் கண்டக்டர் கனக சுப்ரமணியம்(54). 28 ஆண்டுகளாக அரசு பஸ் நடத்துனர். பூர்வீகம், நீலகிரி மாவட்டம் கொலக் கம்பை. முதலில் தனது சொற்பொழிவை துவக்கியது கொலக்கம்பை - குன்னூர் வழித்தடத்தில்தான்.
இப்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் வழித்தடத்திலும் அவரது சிற்றுரை ஒலிக்கிறது. காலையில் வேலைக்கு வரும்போது, தெருவிளக் குகளை அணைப்பது அவர் செய்யும் முதல் வேலை. பஸ்சை சுத்தம் செய்து, பயணிகளிடம் 5 நிமிடம் சொற்பொழிவாற்றுவது அன்றாட வேலை.பஸ்சில் திருக்குறள் எழுதியிருந்தாலும், "தினம் ஒரு திருக்குறள்' என்ற முறையில், ஒரு குறளைச் சொல்லி, அதற்கு விளக்கத் தையும் சொல்கிறார். பஸ் சில் பயணிக்கும் ஒருவரை தேர்வு செய்து, அவருக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசாகவும் கொடுக்கிறார்.பஸ் புறப்படும் முன் அவர் சொல்லும் உத்தரவாதம்..."எங்கள் ஓட்டுனர், பேருந்தை இயக்கும் போது கைபேசியில் பேச மாட்டார்,''
அவர் சொல்வதை ஆமோதிப்பதைப்போல் திரும்புகிறார் ஓட்டுனர். இந்த காம்பினேஷனில் கவர்ந்திழுக்கப்பட்டு, தினமும் இந்த பஸ்சை தேடி ஓடி வருகிறார்கள் பயணிகள்.பஸ்சில் வரும் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை கருத்துகளை தெரிவிக்கும் கனக சுப்ரமணியம், ஏழைக்குழந்தைகளுக்கு, இலவச சீருடையும் வாங் கித் தருகிறார். தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கினால், பயணிகளுக்கு மத்தியில் சந்தன மாலை அணிவித்து கவுரவிக்கிறார்.
"செந்தமிழ்' அறக்கட்டளையை நடத்தும் கனகு, சிறைத்துறையின் அனுமதியோடு, கைதிகளுக்கு போட்டிகளை நடத்தி பரிசும் வழங்குகிறார். நண்பர் ஒருவருடன் சேர்ந்து கோ வையில் இவர் நடத்தும் "சாரோன்' முதியோர் இல்லத்தில் இப்போது இருக்கும் ஆதரவற்ற முதியோர் எண்ணிக்கை 15.எச்.ஐ.வி.,யால் பாதித் தோருக்கு, கோவை "சினேகம்' அறக்கட்டளையுடன் இணைந்து, இலவச மருந்து, சத்து மாவு வழங்கி வருகிறார். தனியார் தொண்டு நிறுவனங்கள் இவருக்கு, "சேவைச்செம்மல்', "கோவை மாமனிதர்', "இலக்கியக் காவலர்', "செம்மொழிச் செல்வர்' என பல பட்டங் களைக் கொடுத்துள்ளன.
""எனக்கு சத்ய சந்திரன், சத்ய சுதன்னு ரெண்டு மகன்கள் இருக்காங்க, வளர்ப்பு மகன், மகள்கள் நாலு பேர் இருக்காங்க, அவுங்களோட ஒத்துழைப்பு இல்லாம இவ்வளவு வேலைகளை நான் செய்ய முடியாது. எங்க ஆபீசருங்க பண்ற உதவி அதை விடப் பெருசு, நாலு பேருக்கு நல்லது செய்யணும்னாலும் ரெண்டு கையாவது இணைஞ்சாத்தான் நடக் கும். அப்பிடி எனக்கு உதவுற கைகள் நிறைய...,''இரு கைகளையும் அகல விரித்துச் சொல்கிறார் கனக சுப்ரமணியம்.இவரது பஸ்சில் அடிக்கடி பயணிகள் விசில் அடிப்பதுண்டு. அதற்காக இவர் அலுத்துக் கொள்வதில்லை; அத்தனையும் இவரது சொற்பொழிவுக்காக கிடைப்பவை. நல்ல நடத்துனர், நல்ல பயணிகள்... போலாம் ரைட்!
'நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை'