நன்றி: சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? & நல்லதோர் வீணை செய்தே
பெற்ற குழந்தைக்கு காய்ச்சல் வந்தாலே மனம் உடைந்து போகும் பெற்றோர்கள் இருக்க சாலை விபத்தில் மூளை சிதைவு ஏற்பட்டு இறந்த தனது மகனின் உடல் உறுப்புக்களை தானம் செய்த பெற்றோரைப் பற்றி கேள்விப் பட்டவுடன் மனதிற்குள் சொல்ல முடியா பாரம் குடி கொண்டுவிட்டது.
மகன் இறந்து விட்ட சூழ்நிலையில் அவன் உறுப்புகளை தானமாகக் கொடுத்த அந்தப் பெற்றோர் என்னைப் பொறுத்த வரையில் வணங்கப்பட வேண்டியவர்கள். அப்படி பட்ட அவர்களை இறந்த மகனின் உடலை வாங்க அங்கும் இங்கும் அலையச் செய்து, அவர்களின் மன வேதனை அதிகமாக்கும் செயல்களைச் செய்த மருத்துவ நிர்வாகத்தை என்னவென்று சொல்வது..
நடந்த சம்பவம் இதோ உங்கள் பார்வைக்கு..
சென்னை, போரூரை அடுத்த காரம்பாக்கம், தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் மதன்குமார். மருந்துக் கடை வைத்துள்ளார். இவர், தன் மனைவி, மகன் அனீஷ்குமார், 6, ஆகியோருடன், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தியேட்டரில், சினிமா பார்த்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.
சேத்துப்பட்டு, ஸ்பர்டேங்க் சாலை அருகே சென்றபோது, நாய் ஒன்று, திடீரென குறுக்கே வந்தது. நிலைத்தாடுமாறிய மதன்குமார், மனைவி மற்றும் மகனுடன், இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில், அனீஷ்குமாருக்கு, தலையில் பலத்த அடி பட்டது. சிகிச்சைக்காக, சேத்துப்பட்டில் உள்ள, பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு, அனீஷ்குமார், மூளைச்சாவு அடைந்ததை, மருத்துவர் உறுதி செய்தனர். இதையடுத்து, தன் மகனின் உறுப்புகளை தானம் செய்ய, மதன்குமார் ஒப்புக் கொண்டார்.
உடனே, அனீஷ்குமாரின் கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகளை, தனியார் மருத்துவமனை நிர்வாகம் தானமாக பெற்றது.
விடயம் இதோடு முடிவடையவில்லை.
அனீஷ்குமாரின் உடல் உறுப்புகளை தானமாக பெற்ற, தனியார் மருத்துவமனை நிர்வாகம், அவனின் உடலை, பிரேத பரிசோதனை செய்ய, அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. அங்கு, "விபத்து நடந்த இடம், எங்கள் மருத்துவமனை நிர்வாக எல்லைக்குள் வராது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள்' என, கூறினர்.
அனீஷ்குமாரின் உடல் உறுப்புகளை தானமாக பெற்ற, தனியார் மருத்துவமனை நிர்வாகம், அதுகுறித்து எங்களிடம் முன்கூட்டியே தெரிவித்து, அனுமதி பெறவில்லை. எனவே, பிரேத பரிசோதனை செய்ய முடியாது' என, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இதனால், ஆத்திரமடைந்த மதன்குமாரின் உறவினர், 50க்கும் மேற்பட்டோர், மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அதன்பின், ஒருவழியாக, நேற்று மாலை, 5:00 மணிக்கு பிரேத பரிசோதனை முடிந்து, அனீஷ்குமாரின் உடல், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.