அளவற்ற ஆத்ம பலமும், `காலம்' என்னும் எல்லையைக் கடந்த திவ்ய ஞானத்தையும் பெற்ற நம் மகரிஷிகள் காட்டிய பவித்திரமான பாதையிலிருந்து நாம் எத்தனை தூரம் இன்று விலகி வந்துவிட்டோம்!
நினைக்க, நினைக்க வேதனை கரைபுரண்டு ஓடுகிறது நம் உள்ளத்தில்!!!
சென்ற வாரம், அமெரிக்காவில் வசித்துவரும் தமிழ்ப் பெண்மணி ஒருவர் எனக்கு எழுதியிருந்த கடிதத்தின் ஒரு குறிப்பிட்ட வாசகம்தான் என் நெஞ்சை ஊடுருவி, என்னைச் சிந்திக்க வைத்தது. அமெரிக்காவில் படித்து, பட்டம் பெற்று, நல்ல பதவியில் உள்ள தனது மகனின் திருமணப் பிரச்சினையைப் பற்றித்தான் அந்தச் சகோதரி எனக்கு எழுதியிருந்தார். அவர் எழுதியிருந்த கடிதத்தின், குறிப்பிட்ட சில வரிகளை மட்டும் இதோ இங்கு கூறியிருக்கிறேன் -அவர் எழுதியுள்ள வாசகம் மாறாமல்!
``சென்ற சுமார் 40 அல்லது 50 ஆண்டுகள் வரை, பெண்களைப் பெற்றவர்கள்தான் தங்கள் பெண் திருமண வயதை அடைந்தவுடன், `வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கிறேன் - சீக்கிரத்தில் நல்ல வரன் அமையவேண்டுமே...' என்று கூறுவார்கள். இப்போது பிள்ளையைப் பெற்றவர்கள்தான், பிள்ளைக்குத் திருமண வயது வந்ததும், வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பதுபோல், பயப்பட வேண்டியிருக்கிறது...''
இதனை எழுதி, தன் பிள்ளையின் திருமணம் பற்றிய பிரச்சினை பற்றிக் கேட்டிருந்தார், அமெரிக்காவில் உள்ள அந்தப் பெண்மணி. இப்பெண்மணியின் மனக்குமுறலும், வேதனையும், இன்று பல்லாயிரக்கணக்கான, பிள்ளையைப் பெற்ற பெற்றோர்கள் படும் வேதனை, அச்சம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. அப்படியானால், பெண்களைப் பெற்றவர்கள் மட்டும் கவலையில்லாமலா இருக்கிறார்கள்?
ஆக, இன்றைய சூழ்நிலையில், பெண்ணைப் பெற்றவர்களுக்கும் நிம்மதி இல்லை! பிள்ளையைப் பெற்றவர்களுக்கும் நிம்மதி இல்லை!!
இந்நிலை மாறவேண்டும். மாறியே ஆகவேண்டும் - மக்களின் நன்மைக்காக, சமூகத்தின் நலனுக்காக, நாட்டின் நலனுக்காக!
இவ்விதம் பெண்ணைப் பெற்றவர்களும், பிள்ளையைப் பெற்றவர்களும் வேதனையிலும், பயத்திலும் தங்களை வருத்திக்கொள்ள என்ன காரணம்? அதற்குக் காரணமானவர்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றைத் தெரிந்துகொள்வதற்கு அதிக முயற்சி தேவையில்லை!
இருவருமே காரணம்தான்!
இத்தகைய சூழ்நிலை உருவாகி, இன்று விபரீத அளவிற்கு வளர்ந்துவிட்டதற்குக் காரணம், பெண்ணைப் பெற்றவர்கள், பிள்ளையைப் பெற்றவர்கள் ஆகிய இருவரின் பணத்தாசையே காரணமாகும்.
ஆரம்பத்தில், பிள்ளை வீட்டினரின் பணத்தாசையினால், அடியோடு நிர்மூலமாக்கப்பட்ட பெண்ணைப் பெற்ற குடும்பங்கள் ஏராளமாக இருந்தன. பெண் வீட்டினர் என்றாலே ஏதோ அடிமைகள் என்பதுபோல் நடத்தி வந்தனர் பிள்ளை வீட்டினர்.
காலம் மாறியது, சிறிது சிறிதாக! `படித்தால்தான் வாழ்வு' என்பதைப் பொறுப்புடன் உணர்ந்த பெண்கள், கல்வியில் கவனம் செலுத்தினர்.
பல இல்லங்களில், ஆண் பிள்ளைகள் கிரிக்கெட்டிலும், இதர விளையாட்டுகளிலும் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருந்தபோது, பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தினர். பாடுபட்டுப் படித்தனர். அதற்குப் பரிசாக, பெண்களுக்கு நல்ல வேலைகளும் கிடைத்தன. இன்று, உயர்ந்த பதவிகளிலும், பொறுப்பு வாய்ந்த துறைகளிலும் பெண்கள் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.
பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கக்கூடிய மாறுதல் இது!
பெண்ணின் தெய்வீகப் பெருமையைப் பறித்த பதவியும், பணமும்!
உலகில் `பெண் இனம்' என்று ஒன்று இருந்தாலும், நம் பாரதப் புண்ணியபூமியின் பெண்மணிகள், உலகின் மற்ற பெண்களிடமிருந்து வேறுபட்டவர்கள். `அடக்கம்', `பண்பு', `கற்பு' ஆகியவற்றிற்கே நம் பெண்மணிகள் முதலிடம் கொடுத்து வந்துள்ளனர் - காலம் காலமாக.
`பணம் ஒரு விஷம்' என்றே உபதேசித்து வந்துள்ளனர் நம் மகரிஷிகளும், ஆன்றோர்களும், சான்றோர்களும். எத்தனைதான் படித்தாலும், பணம் சம்பாதித்தாலும், பதவிகளில் இருந்தாலும், பெண்ணிற்குப் பெருமை தருவது, அடக்கம், பண்பு, கற்பு, பொறுமை ஆகிய நற்குணங்களே! இல்லறத்திற்கு ஒளிவிளக்காகத் திகழ்பவள் நல்ல மனைவியே!
ஆனால் இவற்றிற்கு மாறாக, இன்று பல பெண்கள், படித்து, நல்ல வேலையும் கிடைத்தவுடன், பெற்றோர்களைத் தூக்கியெறிந்து பேசுவதும், தங்கள் இச்சையாக, கணவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதும் அதிகரித்துவருகிறது. பல குடும்பங்களில், பெண்ணின் தாய், தந்தையர், திருமண வயதில் தங்கள் பெண்ணிற்குத் திருமணத்தைச் செய்யாமல், `இப்போது என்ன அவசரம்?' என்று விவாகத்தைத் தள்ளிப்போட்டு விடுகின்றனர். இதனால் பல குடும்பங்களில் பல விபரீதங்கள் ஏற்பட்டு வருவது கண்கூடு!
பிள்ளையைப் பெற்றவர்கள் செய்யும் தவறு!
பெண் வீட்டினரின் நிலைமை இவ்வாறிருக்க, நன்றாகப் படித்து, கைநிறைய சம்பாதிக்கும் பிள்ளைகளுக்குக்கூட, நிறைய சம்பாதிக்கும் பெண்ணையே தேடுகின்றனர் பிள்ளையைப் பெற்றுள்ளவர்கள்.
``நம் பிள்ளைதான் நன்றாகச் சம்பாதிக்கிறானே! சாதாரண குடும்பமாக இருந்தாலும், நல்ல குடும்பத்தில், நற்குணங்கள் அமைந்த பெண்ணை மருமகளாக ஏற்று, அப்பெண்ணிற்கு வாழ்வளிக்கலாமே...'' என்று பிள்ளை வீட்டினர் நினைப்பதில்லை.
``நம் படிப்பிற்காகவும், சம்பாதிக்கும் பணத்திற்காகவும்தான் தங்கள் பிள்ளைக்குத் தன்னை நிச்சயம் செய்துள்ளனர் பிள்ளை வீட்டினர்...'' என்பது பெண்களுக்குத் தெரியும்.
ஆதலால்தான், தற்காலத் திருமணங்களில் முன்பிருந்த மகிழ்ச்சி, மனநிறைவு, உற்சாகம், லட்சுமிகரம் ஆகியவை இருப்பதில்லை. மணமகள், மணமகன் ஆகியோரின் முகங்களிலும் அந்தத் தெய்வீகப் பூரிப்பு இல்லை.
திருமண வயதும் தாண்டிப் போய், இளமையும் குறைந்துவிடுவதால், மணமகள், மாப்பிள்ளை ஆகியோர், மாலையைப் போட்டுக்கொண்டு, ஏதோ சாவி கொடுத்த பொம்மை போல், முகத்தில் கஷ்டப்பட்டு செயற்கையான ஒரு புன்முறுவலை வரவழைத்துக்கொண்டு நடந்து வருவதைப் பார்க்கிறோம், இன்றைய பல திருமண மேடைகளில்! பெண்களிடமும் ``சென்று பார்ப்போம்! பிடிக்காவிட்டால் திரும்பிவிடுவோம்'' என்ற மனப்பான்மை வளர்ந்து வருகிறது.
ஆம்! பணம் கொடுத்து எவற்றையெல்லாம் வாங்க முடியாதோ, அவற்றையெல்லாம் இன்று நாம் இழந்துவிட்டோம்!
சரியான மருமகனையும், குடும்பத்திற்கு ஏற்ற மருமகளையும், ஜாதகத்தில் லக்கினம், பூர்வபுண்ணியம், களத்திரம், ஆயுள், மாங்கல்ய ஸ்தானத்தைப் பார்த்து தேர்ந்தெடுக்கும்படியும், தக்க திருமண வயதில் திருமணத்தைச் செய்துவிடும்படியும் ஜோதிடம், ஆயுர்வேதம், தர்மசாஸ்திரம் ஆகிய மூன்றும் வலியுறுத்தியுள்ளன.
காலம் கடக்கும் முன், நம் மகரிஷிகள் காட்டியுள்ள தர்மநெறிக்குத் திரும்புவோம். நம் குழந்தைகளின் திருமணத்தை வியாபாரமாகக் கருதாமல், மகிழ்ச்சியான மணவாழ்க்கையை அமைத்துத் தருவோம் !