Friday, August 16, 2013

பாட்டியின் ஞாபகம்

இப்போதெல்லாம் எனக்கு
பாட்டியின் ஞாபகம்
அடிக்கடி வருகிறது.

கொஞ்சம் அன்புக்காக
எனது சிறு புன்னகைக்காக
ஜீவனுக்குள்
பாசத்தின் ஜென்மத்தைப்
பதுக்கி வைத்திருந்த பாட்டி.

எனக்குத் தெரிந்து
பாட்டியின் நெடும் பயண நேரமே
சந்தைக்கும்
சமையலறைக்கும் இடைப்பட்ட தூரம் தான்.

கொல்லைப்புறத்தின்
பதனீர்ப்பானைகளுக்கிடையில்
பதியனிடப்பட்டு
பயிரானது தான் அவள் முதுமை!!

சருகுகள் பொறுக்குவதிலும்
சுள்ளிகள் சேகரிப்பதிலும்
ஓலை முடைவதிலுமாய்
அவள் வருடங்கள் முழுவதுமே
விறகுக்காய் விறகாகிப் போனது.

கிழக்குப் பக்கத்தில்
கட்டிவைத்திருந்த
கோழிக் கூட்டுக்குள்
முட்டைதேடி முட்டைதேடி
முடிந்துபோகும் காலைகள்.

சமையல் கட்டில்
சருகுக் கூட்டில்
கரிசல் காட்டில்..
இப்படியே மங்கிப் போகும்
மாலைப் பொழுதுகள்.

மண்ணெண்ணெய் விளக்கு
வெளிச்சத்தில்
விட்டில்களை விரட்டி விரட்டி
பாக்கு இடிப்பதிலேயே
முடிந்து போகும் இரவுகள்..

நினைவிருக்கிறது.
சின்னவயதில்
ஆசையாய் நெய் முறுக்கு தந்து
என்னைத் தழுவும் போதெல்லாம்
வழியும்
வெற்றிலைக்கறை கண்டு
விருப்பமின்றி ஒதுங்கியிருக்கிறேன்.

இப்போதெல்லாம்
சாப்பிட்டாயா ?
என்று கேட்கும் பாட்டியின் குரல்
அவ்வப்போது எதிரொலிக்கும்
ஆழ்மனதின் ஏதோ ஒரு எல்லையிலிருந்து.

பாட்டியிடம்
சாப்பிட்டாயா என்று
பாசத்தோடு ஒரே ஒருமுறை
கேட்கத் தோன்றுகிறது.

கால ஓட்டத்தில் ஏதேதோ மாற்றங்கள்
பதனீர் சட்டிகள்,
சருகு அடுப்புகள்,
மண்ணெண்ணெய் விளக்குகள்,
எல்லாம்..
எல்லாம் இறந்து விட்டன.
என் பாட்டியும்.

- Joseph Xavier Dasaian



1 comment:

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.