Saturday, May 5, 2012

கார்ல் மார்க்ஸ்


பகிர்வுக்கு நன்றி :  : Nagoorkani Kader Mohideen Basha
 
'உலகத் தொழிலாளர்களின் காட்பாதர்' மார்க்ஸின் பிறந்த நாள் இன்று 05.05.2012.

“என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை"

- சரித்திரத்தில் நீங்கா இடம்பிடித்த இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரரின் பெயர் ஜென்னி.

மிகப்பெரும் செல்வந்த குடும்பத்தில் பிறந்தாலும் தான் வயப்பட்ட காதலுக்காக தான் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு பால்கொடுக்க முடியாமல் ரத்தத்தைக் கொடுக்க வேண்டிய கொடுமைக்கு ஆளான இந்தப் பெண்மணியின் கணவர்தான் உலகையே உலுக்கிய மாமேதை!

இந்த ஜென்னியின் பொறுமையும் சகிப்புத் தன்மையும்தான் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து.. முதுகெலும்பு ஒடியப் பாடுபட்டு பாடுபட்டு முதுகெலும்பே அற்றுப் போன உழைக்கும் வர்க்கத்தின் கைகளில் ஆயுதம் ஏந்த வைத்த "மார்க்சியம்" எனும் தத்துவத்தை பிரசவிக்க அடித்தளமாக இருந்தது!

மார்க்சியத்தின் தந்தை கார்ல் மார்க்ஸின் மனைவிதான் ஜென்னி!

தன் வீட்டுப் பொருளாதாரம் சுழியமாகிப் போன நிலையில் உலகத் தொழிலாளர்களின் உரிமைப் புரட்சிக்கு சுழிபோட்டவர் கார்ல் மார்க்ஸ்.. இன்று அவரது பிறந்த நாள்! (மே 5)

தொழிலாளியின் உழைப்பு, அதற்கு கொடுக்கும் விலை, அது செல்லும் பாதை, அதனால் சமுதாயத்தில் எப்படியான மாற்றங்கள் நிகழ்கின்றன? என்பதையெல்லாம் தம் வறுமையையும் பொருட்படுத்தாமல் ஆராய்ந்து ஆராய்ந்து "மார்க்சியம்" எனும் தத்துவத்துக்கு மூலவேராக "மூலதனம்" எனும் பெருநூலைக் கொடுத்தவர் காரல்மார்க்ஸ்!

பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான ரைன் நதிக்கரையோரத்தில் யூத மதத்தில் 1818-ம் ஆண்டு மே 5-ம் நாள் பிறந்தார் மார்க்ஸ்! படிப்பை முடித்த கையோடு ரைன் கெஜட் எனும் பத்திரிகையில் சேர்ந்தார்... பத்தே மாதத்தில் அதன் ஆசிரியரானார்! அவரது கட்டுரைகள் ஜெர்மனி மக்களுக்கு உதயசூரியனை முன்னிறுத்தியது!

ஏடும் எழுதுகோலும் எடுத்தாலே சிறைவாசம் என்ற அடக்குமுறையை எதிர்நோக்கிய கார்ல் மார்க்ஸுக்கு கரம் கொடுத்தவர் ஏங்கெல்ஸ்! இந்த தோழர்கள்தான் இன்றும் பெயரைக் கேட்டாலே சிலிர்க்க வைக்கும் "கம்யூனிஸ்டுகளின்" காட் பாதர்கள்!

நாடு கடத்தப்பட்ட காலங்களிலும் கூட தன் சிந்தனையை இழந்துவிடவில்லை! வீட்டில் பிள்ளைகளும் மனைவியும் வறுமையின் கோரப் பிடியில் உயிரிழக்க.. தாமோ மரணத்தின் விளிம்பில் நிற்க.. அந்தக் காலத்தில்தான் காலப்பொக்கிஷமான "மூலதனம்" என்ற நூலை எழுதி முடிக்கிறார் கார்ல் மார்க்ஸ்.

உழைப்பையே மூலதனமாகக் கொண்டு வாழும் தொழிலாளர்களை மூலதனமாகக் கொண்டு முதலாளி வர்க்கம் அவர்களையே சுரண்டும் கொடூரங்களை அ, ஆனா பாடம் எடுப்பதுபோல மூலதனத்தில் பகிரங்கப்படுத்தியவர் மார்க்ஸ்

மார்க்ஸ்-ஏங்கெல்ஸின் வரலாற்று நூல்களே இன்றைய இடதுசாரி உலகத்துக்கு ஆணிவேர்! இவர்களது தத்துவங்களை ஏந்தியவர்கள்தான் லெனினும் மாவோவும்! இவர்களுக்கே தொடர்பில்லாத தேசங்களில்தான் இவர்களது லட்சியங்கள் நிறைவேறி இருக்கின்றன!

மாமேதை மார்க்ஸின் சிந்தனைகள் நூற்றாண்டுகளைக் கடந்தும் விடுதலையை நேசிக்கும் எந்தத் தலைமுறையும் கையில் ஏந்தக் கூடிய புரட்சிகர ஆயுதமாகவே இருக்கும்!

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.