Monday, July 8, 2013

அவள்

 
அவளை அனுமானித்து விட இயலாது
நீங்களோ
நானோ
வேறு எவருமோ…
எளிய புன்னகையுடன்
இன்முகத்துடன் கடந்து செல்லும்
அவளை எப்படியும்
கணித்து விட இயலாது தான் நாம்…

இச்சமூகத்தின் அசாதாரணங்களை
சாதாரணமாய் கடந்து விடுகிறாள்
சாதாரணங்களுக்கு தயங்கி நிற்கிறாள்

அவள் கனவுகளில் காணும் எதையும்
கற்பனை செய்யும் அளவிற்கு
நாம் இன்னும் பக்குவப்படவில்லை
யாருடைய கனவுகளிலிலும் அவளும் இருப்பதில்லை

அவளுக்கான வலைகள் விரிக்கப்பட்டே இருக்கிறது
வார்த்தைகளாக
பரிசுகளாக
இன்னும் சொல்லப்படா எதோ ஒன்றாக
அவளோ நிதர்சனத்தைத் தேடி அலைபவளாக
குளிரும் பனியில் வெப்பமாக
ஒளியின் வேகமாக
மலைகளில் தவழும் மேகமாக
இருக்க விரும்புகிறாள்….

சற்று முன் நீங்கள் சந்திக்க விரும்பிய
அவளை நான் சந்தித்தேன்
புன்னகையோடு இருந்தாள்
நான் சந்திக்க விரும்பிய அவளை
ஒளித்தபடி
பிறகுணர்ந்தேன்
அவளே வினாக்களை உருவாக்குகிறாள்
அவளே விடையாகிறாள்
அவள் ஒரு தொடக்கம்
அவள் ஒரு முடிவு
அவள் ஒரு முழுமை
இருந்தும்
உங்கள் சராசரி கேள்விகளோடு
அவள் முன் நிற்கலாம்
பதிலளிப்பாள் என்ற நம்பிக்கையில்…

உங்களுக்கான ஒரு புன்னகையோடு
அவள் என்றும் இருப்பாள்
ஏனெனில்
அவளை அனுமானித்து விட இயலாது
நீங்களோ
நானோ
வேறு எவருமோ
அதற்கு முன்பே அவள் வெகு தூரம்
அவற்றைக் கடந்து போயிருக்கக் கூடும்…

-மழைக்காதலன்

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.