Wednesday, October 10, 2012

மனநலம் காப்போம் - சமூகத்திற்கும்

நன்றி :  Kumaresan Asak  &    ரிலாக்ஸ் ப்ளீஸ்

(அக்டோபர் 10 உலக மனநல நாள்)

குழந்தையின் சிரிப்பை, குறும்பை, மழலைப் பேச்சை, அறியாமல் கேட்கும் கேள்விகளை ரசித்து மகிழாதவர்கள் யார்? குழந்தைப் பருவத்திற்குத் திரும்பிச் செல்லமாட்டாமோ என்ற ஏக்கம் கூட அவ்வப்போது பெரியவர்களுக்கு வருவதுண்டு. ஆனால், குழந்தை வளர வளர அந்த வளர்ச்சியின் அடையாளங்கள் வெளிப்பட வேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம். ஒரு வயதுக் குழந்தையின் சிரிப்புதான் அப்படியே மூன்று வயதுக் குழந்தையிடமும் தொடர்கிறது என்றால், மூன்று வயதுக் குழந்தையின் மழலைப் பேச்சுதான் பத்து வயதிலும் நீடிக்கிறது என்றால் எந்தப் பெற்றோரும் கவலைப்படாமல் இருக்க மாட்டார்கள். விவரம் தெரிந்தவர்கள் குழந்தை மன நல மருத்துவரின் உதவியை நாடுகிறார்கள். விவரம் தெரியாதவர்கள் கோவிலுக்கு நேர்ந்துகொள்கிறார்கள். ஒரு சாமியால் பலன் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் வேறு சாமிக்கு விண்ணப்பம் போடுகிறார்களே தவிர, மருத்துவரை நாடுவதில்லை. குழந்தை ஒரு பைத்தியம் என்று யாரும் சொல்லிவிடக்கூடாதே என்கிற பதற்றம், குழந்தையின் மன நலத்திற்கான வழிகாட்டல்களை நாடுகிற முனைப்பாக மாறுவதில்லை. ஆம், மன நல ஆலோசனை நன்றாக இருப்பதாகக் கருதப்படும் இத்தகைய பெரியவர்களுக்குத்தான் நிறையத் தேவைப்படுகிறது.


உடலுக்கு வரும் நோய்களைப் போலவே, உடலின் அங்கமாகிய மூளையில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் மருத்துவ ஆலோசனைகள் இருக்கின்றன, சிகிச்சைகள் இருக்கின்றன, மருந்துகள் இருக்கின்றன, பயிற்சிகள் இருக்கின்றன. இந்த விழிப்புணர்வை விரிவாக மக்களிடையே கொண்டுசெல்கிற நோக்கத்துடன்தான் உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூ.எச்.ஓ) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் பத்தாம் நாளை உலக மனநல நாளாகக் கடைப்பிடித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாளையொட்டி பல்வேறு நாடுகளிலும் மனநல விழிப்புணர்வுப் பரப்புரை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.


ஒருவர் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்பதன் பொருள் அவரது மனநலத்தில்தான் இருக்கிறது. மனநலம் என்றால் என்ன? ஒவ்வொரு தனிமனிதரும் தனது சொந்த ஆற்றலை உணர்ந்துகொள்கிற, வாழ்க்கையின் இயல்பான அழுத்தங்களை எதிர்கொள்கிற, ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ள வகையிலும் செயல்படுகிற, தனது சமூகத்திற்குப் பங்களிப்புச் செய்யக் கூடிய நலத்துடன் இருக்கிற நிலையேயாகும், என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கிறது.


அண்மைக்காலமாகத்தான் மனநலம் குறித்த ஆய்வுகள் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வாளர்கள் சொல்கிற பொதுவான கருத்து, மனநலம் தொடர்பான தகவல் ஞானம் மக்களுக்குப் போதுமான அளவுக்குப் போய்ச்சேரவில்லை என்பதுதான்.

தகவல்கள் என்றால், மனநல சீர்குலைவுகளில் எத்தனை வகைகள் இருக்கின்றன, அந்த நிலைமை ஏற்படாமல் தடுப்பது எப்படி, எத்தகைய சிகிச்சைகள் இருக்கின்றன என்பன போன்றவை மட்டுமல்ல. ஒவ்வொருவரும் தனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறதா என்பதை தானே அறிந்துகொண்டு, அதற்கான மருத்துவ வழிமுறைகளைத் தயக்கமின்றி மேற்கொள்ளச் செய்வது மட்டுமல்ல. நம் அருகில் அப்படிப்பட்ட ஒருவர் இருந்தால் அவரை எப்படி நடத்த வேண்டும் என்ற ஞானம் முதலில் நமக்கு வேண்டும். பாதிப்புக்கு உள்ளானவர்களில் பலரது நிலைமை கடுமையாவதற்குக் காரணம், குடும்பத்தாரும் மற்றவர்களும் அவர்களைப் பொறுப்புடனும் பரிவுடனும் கையாளத் தவறுவதேயாகும் என்றும் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

மனம் என்பதே தனித்து இயங்குவதல்ல. தனியொரு அங்கமாக அமைந்திருப்பதல்ல. உன்னிடம் என் மனதைக் கொடுத்துவிட்டேன், என்று ஒருவரிடம் சொல்ல வேண்டும் என்றால் உடனே மார்பின் இதயப்பகுதியைத் தொட்டுக் காட்டுகிறோம். அனால் மனம் அங்கே இல்லை! மனதில் ஏற்படுகிற அதிர்வுகள் இதயத்தைத் தாக்குவதால் அதுதான் மனம் என்ற எண்ணம் ஆதியில் ஏற்பட்டிருக்கலாம், அப்படியே நினைத்து நினைத்து, சித்தரித்து சித்தரித்து காலப்போக்கில் இதயத்தையே மனமாகக் கருதுவது என்பது நிலைபெற்றிருக்கலாம்.


உண்மையில் மூளையின் இயக்கம்தான் மனம். மூளை ஒரு வன்பொருள் என்றால், அதில் இயங்குகிற மென்பொருள்தான் மனம்!
அந்த மென்பொருளை வடிவமைப்பதில் குடும்பச் சூழல், உற்றாரின் அணுகுமுறை, கல்வி வாய்ப்புகள், தொழில் நிலைமைகள் என்று வாழ்க்கையின் பல்வேறு தளங்கள் பணியாற்றுகின்றன. பிறவியிலேயே மனவளர்ச்சி குன்றியவராக இருப்பதிலும் கூட, அவரைப் பொறுத்தவரையில் அவரது தனிப்பட்ட நிலமை என்றாலும், அவரது தாய்க்குக் கிடைத்த வாழ்க்கைச் சூழல் அதற்குக் காரணமாகிவிடுகிறது. ரத்த உறவுக்குள்ளேயே தொடரும் திருமணங்கள், உடல் பக்குவப்படாத நிலையிலேயே கருவுற்றுப் பிரசவிக்கும் கட்டாயங்கள் என பலவற்றைக் கூறலாம். இப்படி ஒரு பெண்ணின் மீது மாட்டப்பட்ட சுமைகளின் விளைவாய், அவளுக்குப் பிறக்கும் குழந்தை தனது நிலைமை என்ன என்பதே அறிய முடியாமல் வளர நேரிடுகிறது. இதற்கு யார் பொறுப்பு? மார்க்சியக் கண்ணோட்டத்தின்படி உணர்வு சமூகத்தைத் தீர்மானிப்பதில்லை, சமூகம்தான் உணர்வைத் தீர்மானிக்கிறது. இது மனம் என்பதற்கும் பொருந்தும்.

தொழிலாளர்கள் தங்களது பணிச்சூழல் சார்ந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். சந்தை நெருக்கடிகளை சமாளிக்க நிர்வாகங்கள் மேற்கொள்கிற நடவடிக்கைகள் தொழிலாளர்களைத்தான் மனச் சிக்கலுக்குள் தள்ளுகின்றன. நவீனத் தொழிலுகப் பிரதிநிதிகளாக தகவல்தொழில்நுட்பத் துறையில் பெரும் ஊதியத்துடன் பணியாற்றிக்கொண்டிருக்கிறவர
்கள் அடிக்கடி மன உளைச்சலுக்கு உள்ளாவது பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. உளவியல் மருத்துவர்கள் இன்று தங்களிடம் ஆலோசனைகளுக்காகவும், சிகிச்சைக்காகவும் வருகிறவர்களில் பலர் தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்தவர்கள்தான் என்று தெரிவிக்கிறார்கள்.

தகவல்தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர்கல்வியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். அண்மைக்காலத்தில் உயர்கல்வி வளாகங்களில் மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றன. அது தொடர்பாக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.


இயல்பாக வாழ்ந்துகொண்டிருப்பதாகத் தெரிகிற சிலர், தனிப்பட்ட முறையில் தாழ்வு மனப்பான்மையில் சிக்கியிருக்கிறார்கள். சாதாரணமாக நடக்கிற சில நிகழ்வுகளைக் காணும்போது கூட, அதனால் தன் வாழ்க்கையே நாசமாகிவிடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற அவநம்பிக்கையில் விழுந்தவர்களாக, எதையும் செய்யத் துணியாதவர்களாக, முயற்சியில் ஈடுபடாதவர்களாக ஒடுங்கிப்போகிறார்கள்.


இன்னும் பலவகையான மனச் சிதைவுகள் ஏற்படுகின்றன. உடலுக்கு ஏற்படுவது போன்ற நோய்தான் உள்ளத்திற்கு ஏற்படுகிறது. உடலுக்கு சிகிச்சை போலவே, உள்ளத்திற்கும் சிகிச்சை இருக்கிறது. ஆனால், மனநல சிகிச்சை தேவைப்படுகிறவர்களுக்கும் அந்த சிகிச்சை கிடைக்கப்பெறுகிறவர்களுக்கு
மான இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்த சிகிச்சை இடைவெளி உயர்மட்ட வருமானம் உள்ள நாடுகளில் கூட 35 - 50 விழுக்காடு வரையில் இருக்கிறதாம். குறைந்த வருவாயும் நடுத்தர வருவாயும் உள்ள நாடுகளில் இந்த இடைவெளி, 76 - 85 விழுக்காடு வரையில் இருக்கிறதாம். இவ்வாறு 76 - 85 விழுக்காடு வரையில் சிகிச்சை இடைவெளி உள்ள நாடுகளில் ஒன்றுதான் இந்தியா.

தனி மனித மனநலம் போலவே சமூக மனநலமும் முக்கியம். சக மனிதர்களைத் தாழ்வாக எண்ணுகிற ஒரு எந்த ஒரு சமூகமும் ஆரோக்கியமாக இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. ஊருக்குக் கடைசியில் தள்ளப்பட்ட மக்கள் ஊருக்குள் வந்து கோவிலுக்குள் நுழைந்தால், அந்தக் கோவில் தீட்டுப்பட்டுவிடும் என்று எண்ணித் தடுக்க முயல்கிற ஒரு சமூகம் எப்படி நல்ல மனநலத்தோடு இருப்பதாகக் கூற முடியும்?


எவ்வளவு படித்தாலும், எப்படிப்பட்ட வேலைக்குச் சென்றாலும் அடக்கமாக இருப்பதுதான் நல்ல பெண்ணுக்கு அழகு என்று இந்தக் காலத்திலும் போதித்துக்கொண்டிருக்கிற சமூகத்தின் மனநலம் மருத்து சோதனைக்கு உரியதே.


குழந்தைகளுக்கே உரிய இயல்பான கேள்வி கேட்கும் துறுதுறுப்பைத் துருப்பிடிக்கவைத்கிற, பெரியவர்களை எதிர்த்துப் பேசாதே என்று ஐந்திலேயே வளைக்க முயலும் சமூகம் ஐம்பதானாலும் ஆரோக்கியமாக இருக்கிறது என்று சொல்வதற்கில்லைதான்.

மனநல அக்கறையை உலகளாவிய மேற்கொள்வது பற்றி உலக சுதாதார நிறுவனம் முதல் முறையாக 2001ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் மனநலம் தொடர்பாக 10 செயல்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

1) தொடக்கநிலையிலேயே மருத்துவ சிகிச்சை.
2) மனநல சிகிச்சைக்கான மருந்துகள் எளிதில் கிடைக்கச் செய்தல்.
3) சமூகத் தளத்தில் சிகிச்சை அளித்தல்.
4) பொதுமக்களுக்குக் கற்பித்தல்.
5) சமூகங்களையும், குடும்பங்களையும், நுகர்வோரையும் ஈடுபடுத்துதல். 
6) தேசிய கொள்கைகள், திட்டங்கள், சட்டங்களைக் கொண்டுவரச் செய்தல்.
7) மனித வளங்களை வளர்த்தல்.
8) பிற துறைகளோடு இணைப்பு ஏற்படுத்துதல்.
9) சமூக மனநலத்தைக் கண்காணித்தல்.
10) புதிய ஆய்வுகளுக்கு ஊக்கமளித்தல்.


உலக அமைப்பின் இந்த நோக்கங்கள் ஆரோக்கியமானதாகவே இருக்கின்றன. அடிப்படையான உடல் நல மருத்துவத்தைக் கூட தனியார் நிறுவனங்களின் வருவாய்க் கிடங்காக மாற்றுகிற கொள்கை திணிக்கப்படுகிற இந்தியா போன்றதொரு நாட்டில் இந்த பத்து இலக்குகள் எப்போது எட்டப்படும்? இருபது ரூபாய் கொடுத்து ஐஸ் கிரீம் வாங்கத் தயாராக இருக்கிறவர்கள், அரிசிக்கும் கோதுமைக்கும் ஒரு ரூபாய் கூடுதலாகக் கொடுக்க வேண்டுமானால் கூச்சல் போடுகிறார்கள் என்று கூறுகிற ஆட்சியாளர்கள் உள்ள நாட்டில் இந்த இலக்குகள் என்ன ஆகும்? எல்லாம் அந்நிய மதங்கள் நுழைந்ததால் ஏற்பட்ட கேடுதான், இந்து மத நாடாக மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சதித்திட்டங்கள் தீட்டப்படுகிற நாட்டில் இந்த மனநல நோக்கங்கள் எப்படி நிறைவேறும்?


(தீக்கதிர் 7-10-2012 ஞாயிறு இணைப்பாகிய வண்ணக்கதிர் இதழில் வந்துள்ள எனது கட்டுரை)
 
- Kumaresan Asak

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.