Friday, September 28, 2012

அன்பு மகள் அனுப்பும் மடல்

நன்றி :  வை . நடராஜன் & அணுவகழ்




''ஒவ்வொரு
பெண் பிள்ளைக்கும் அவர்கள் தந்தைக்கும் சமர்ப்பணம்'' !!!!!!!!

****-------------*****

உறவில் தந்தையாய்
உணர்வில் அன்னையாய்
உயிரில் கலந்தாய் அப்பா _ நான்
இரவில் தனியாக
தெருவில் வரும் போது
மழையில் நனைந்தாய் அப்பா..

குடையில் இடமிருந்தும்
நடுவில் எனை நிறுத்தி
மழையில் நனைந்தாய் அப்பா - தினம்
மனதில் எனை நிறுத்தி
உடலில் தளர்ந்தாலும்
உழைத்து களைத்தாய் அப்பா..

தஞ்சை பெருங்கோயில்
தலைய சிற்பி போல்
என்னை வளர்த்தாய் அப்பா _ தினம்
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை செதுக்க நீ
உன்னை வருத்தாய் அப்பா..

பணியில் இருந்து நீ
திரும்பி வரும் வரையில்
பசியில் இருப்பேன் அப்பா _ உன்
மடியில் அமர்த்தி என்
இதழில் உட்டியதை
நினைத்து அழுதேன் அப்பா..

கல்வி கற்க நான்
பள்ளி சென்ற தினம்
இன்றும் நினைப்பேன் அப்பா - உன்
கையை இழந்து நான்
உள்ளே போகும் போது
கண்கள் நனைத்தேன் அப்பா..

என்னை கரை சேர்க்க
உன்னை அலையாக்கி
அலைந்து உழைத்தாய் அப்பா
விண்ணை அழகாக்கும்
வெள்ளி மலர் போல
என்னை வளர்த்தாய் அப்பா..

உடலில் நலமின்றி
உறைந்த பனி போல
படுத்து சாய்ந்தேன் அப்பா _ என்
தலையில் வருடி நீ
உணவு ஏதுமின்றி
இரவை கழித்தாய் அப்பா..

கழுத்தில் மணி வைரம்
காலில் புது வெள்ளி
போட்டு ரசித்தாய் அப்பா _ கோயில்
குளத்தில் மீன் உண்ணும்
அழகை பொறி போட்டு
படியில் ரசிப்போம் அப்பா..

நிலத்தில் விளைந்த அந்த
நெடிய கரும்பை
கடித்து ருசித்தோம் அப்பா
படிக்க உன்னை பிரிந்து
வசிக்க நேர்ந்தும் நம்
அகத்தில் வசித்தோம் அப்பா..

கொடுத்த வாழ்விற்கு
கோடி நன்றிகள்
கொடுத்த இறைவா அப்பா _ நீ
இருக்கும் இடத்தில் தான்
இறைவன் இருக்கிறான்
கோயில் வேண்டாம் அப்பா..

அடுத்த பிறவியில்
அன்னையாக நான்
இருக்க நேர்ந்தால் அப்பா - இனி
எடுக்கும் பிறவியெல்லாம்
உன்னை குழந்தையாய்
சுமக்க வேண்டும் அப்பா ..

- வை . நடராஜன்

http://ursnattu.blogspot.in/2012/09/blog-post_28.html 

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.