Friday, September 28, 2012

களமுனையிலிருந்து, சே

 
நன்றி :  ரிலாக்ஸ் ப்ளீஸ்   (via Martin Duraiyappa)
களமுனையிலிருந்து, சே தன் பெற்றோர்களுக்கு எழுதிய கடிதம்.

என் அன்பிற்குரியவர்களே,

கேடயத்துடன் என் பயணம் மீண்டும் தொடர்கிறது.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் விடை பெற்று, உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில், நான் ஒரு சிறந்த படைவீரனாகவும், சிறந்த மருத்துவராகவும் இல்லாமல் இருந்ததற்காக வருந்தி எழுதியிருந்ததை இபொழுது நினைவு கூர்கிறேன். இன்று, நான் அத்தனை மோசமான ஒரு படைவீரன் அல்ல.

எனது நம்பிக்கை மேலும் உறுதியடைந்துள்ளது. என்னுடைய மார்க்சியம் ஆழமானதாகவும் தூய்மையானதாகவும் மாறிவிட்டது. சுதந்திரத்துக்காகப் போராடும் மக்களுக்கு ஒரே வழி, ஆயுதப் போராட்டம்தான் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அந்த நம்பிக்கையின்படி நடக்கிறேன்.

சிலர், என்னை ஒரு சாகசக்காரன் என்று அழைக்கலாம். நான், சாகசக்காரன்தான். ஆனால் ஒரு வித்தியாசம். தன்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கைகளை நிரூபிப்பதற்காகத் தன்னையே அர்ப்பணம் செய்து கொள்ளத் தயங்காத சாகசக்காரன்.

இதுவே என்னுடைய கடைசிக் கடிதமாகவும் இருக்கலாம். நடக்க இருப்பதை தர்க்க ரீதியாக ஆராய்ந்து பார்த்தால், அப்படித்தான் தோன்றுகிறது. ஒரு வேளை அப்படி நடந்துவிடும் எனில், இப்போதே என்னுடைய தழுவலை ஏற்றுக் கொள்ளுங்கள்.

நான் உங்கள் அனைவரையும் ஆழமாக நேசிக்கிறேன். என்னுடைய நேசத்தை எப்படி வெளிப்படுத்துவது என்றுதான் தெரியவில்லை.

என்னுடைய வழியில் நடப்பது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். ஆனால், பல சமயங்களில் நீங்கள் என்னைச் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். ஒரு வேளை, என்னைப் புரிந்து கொள்வது கடினமான காரியமாக இருந்திருக்கலாம். ஆனால், இப்போதைக்கு என் மீது நம்பிக்கை வையுங்கள். அது போதும் எனக்கு.

எனது கால்கள் தொய்ந்துவிட்டன. நுரையீரல்கள் ஓய்ந்து விட்டன. ஆனால் என் மனஉறுதி, எல்லாவற்றையும் சரிசெய்யும்.

இருபதாம் நூற்றாண்டின் இந்தச் சிறிய போராளியை அவ்வப்போது நினைத்துக் கொள்ளுங்கள்.

அன்பு தாய், தந்தையே! உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்காத இந்தத் தறுதலைப் பிள்ளை உங்கள் இருவரையும் தழுவிக் கொள்கிறான். ஏற்றுக் கொள்ளுங்கள்.
- எர்னஸ்டோ -

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.