Saturday, March 24, 2012

அய்யப்பமாதவன் கவிதைகள்

Courtesy & Thanks - அய்யப்பமாதவன்



மரங்களடர்ந்த சாலையில்
சிச்சிறு இலைகளில் நர்த்தனம் புரியும் கோடையில்
மரமெழுதும் நிழலோவியத்தில் ஒளித்துக்கொண்டேன்

ஒளித்தாலும் ஒளியாத உடல்
ஒளிக்கதிர் தைத்து விழிப்பிலிருந்து
உறக்கம் வரை சுரக்கும் வலி

குளிர் உருவாக்கும்
நிழல்மரச் சாலையில் பரிதவிப்புகள்
சஞ்சலங்கள் பயங்கள்
சலிப்புகளில்லாத சுபயாத்திரை

சாத்தியமற்ற நிழல் சாலை
கருணையில் இரவாத தீயிலும்
சாம்பலாயிருக்கிறேன்

விழித்த சிந்தையில்
சிறகுகள் சிறகுகள்
ஆகாயம் ஆகாயம்
பறவை முதுகில் நிலவொளி
பெருவெளி அதிசயம்

கீழிறங்கி நடை நடந்து சதையுடல்
உயிர் தரித்து மனிதன் என்ற சொல்லில்
நிழல்மரச் சாலையில்
கோடை வீழ்த்தும் சருகிலைகளில்
வெயிலேறிப் போகிறேன்

தீராத பருவங்கள் தீராத ஆசைகள்
கிளம்பிவிட்ட பயணத்தில்
இருள் ஒளிப் பாதைகள் பாதைகள்.

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.