Thursday, November 3, 2011

கவலைக்கிடமாக ஒரு நாடே இருந்தால்.. கவலைப்பட வேண்டியது யார்?

Courtesy & Thanks to : Sakthivel Palanisamy (Who Shared this)

கவலைக்கிடமான நிலையில் ஒரு தலைவரோ, கலைஞரோ இருந்தால் நாடே கவலைப்படுகிறது. ஆனால் கவலைக்கிடமாக ஒரு நாடே இருந்தால் கவலைப்பட வேண்டியது யார்?

அப்படி கவலைக்கிடமாக இருப்பதுகூட பரவாயில்லை, அப்படி இருக்கிறோம் என்கிற உணர்வுகூட அந்த நாட்டை வழிநடத்தும் தலைவர்களுக்கு இல்லாமல் இருந்தால் எப்படி?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன் சிங் பிரதமரானபோது மிகவும் அகமகிழ்ந்தோ...ம். மிகச் சிறந்த நிர்வாகி, நேர்மையாளர், நடுநிலையாளர், அரசியல் கறை படாதவர் என்றெல்லாம் ஆலவட்டம் சுழற்றினோம். ஆட்சி நிர்வாகத்தை அவரும் கட்சி நிர்வாகத்தை சோனியாவும் பார்த்துக் கொள்ள இந்தியா வல்லரசாகிவிடும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து எல்லோரும் கூடிக் குலவையிட்டோம்.

இன்றைக்கு நிலவரம் என்ன? காய்கறி, அரிசி, பருப்பு போன்ற அன்றாட உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால் நடுத்தர, அடித்தட்டு மக்களின் விழி பிதுங்குகிறது. விலைவாசி கழுத்தை நெரிக்கிறது. சமையல் கேஸ், டீசல், பெட்ரோல் விலையை மத்திய அரசு கூட அல்ல, பெட்ரோலிய நிறுவனங்களே நிர்ணயிக்கும் நிலைமை. வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை என்கிற நிலைமை மாறி, மாதாமாதம் பெட்ரோல் விலை உயர்கிறது. இப்படியே போனால், பங்குச் சந்தையைப்போல, தங்கம், வெள்ளி விலை நிலவரம்போல பத்திரிகைகளில் பெட்ரோல், டீசலின் அன்றாட விலையைப் போட வேண்டிய துர்பாக்கியம்கூட ஏற்படலாம்.

அருணாசலப் பிரதேசம் எங்களுடையதுதான் என்று வாரத்துக்கு ஒரு முறை அறிவித்துக்கொண்டிருக்கும் சீனா நம்முடைய காஷ்மீர மாநிலத்துக்கு உள்ளேயே வந்து நம்முடைய ராணுவத்தினர் பயன்படுத்தி குளிர்காலம் என்பதால் விட்டுவிட்டு வந்த பதுங்கு குழிகளையே அழித்துவிட்டுப் போகிறது.
வான் எல்லை மீறி எங்கள் நாட்டுக்குள் வந்துவிட்டீர்கள் என்று கூறி நம்முடைய தரைப்படை வீரர்கள் சென்ற ஹெலிகாப்டரை பாகிஸ்தான் வான்படை வழிமறித்து அழைத்துச் செல்கிறது. இதைப்பற்றி எல்லாம் மத்திய அரசு கவலைப்பட்டு சுறுசுறுப்பாக ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா?
ஊழல் அதிகரித்து வருவது குறித்து அண்ணா ஹசாரே போன்றோர் கவலைப்படுகின்றனர். விலைவாசி உயர்வு குறித்து நடுத்தர மக்களும் இல்லத்தரசிகளும் கவலைப்படுகின்றனர். சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து வருவது குறித்து நாட்டுப் பற்றாளர்களும் மூத்த குடிமக்களும் கவலைப்படுகின்றனர்.
தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, நிரந்தர வேலைவாய்ப்பு முறை மறைந்து ஒப்பந்தத் தொழிலாளர் முறை நிலைபெற்று வருகிறதே, வேலைக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கவலைப்படுகின்றனர்.

கிராமப்பகுதிகளில் நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தால் விவசாய வேலைக்குப் பண்ணையாள் கிடைப்பதில்லையே என்று விவசாயிகள் கவலைப்படுகின்றனர். அணைகள் கட்டுதல், பாசன வாய்க்கால்கள் அமைத்தல் போன்ற பணிகளை அரசு குறைத்துக் கொண்டுவிட்டதே, குடிமராமத்தே நின்றுபோய் வெறும் கணக்கெழுதி அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் சாப்பிடும் நிலைமை வழக்கமாகிவிட்டதே என்று வேளாண் குடிகள் கவலைப்படுகின்றனர்.
ரூபாயின் மாற்று மதிப்பு குறைந்து வருவதால் சீனா போன்ற நாடுகள் சர்வதேசச் சந்தையில் குறைந்த விலையில் பொருள்களைக் குவிப்பதால் நம்மால் அவர்களுடன் போட்டியிட முடியவில்லையே என்று ஏற்றுமதியாளர்கள் கவலைப்படுகின்றனர்.

நம்முடைய சுதந்திரத்தையும் இறையாண்மையையும் அடகு வைக்கும் வகையில் அணுமின் சக்தி திட்டங்களுக்காக மேற்கத்திய நாடுகளுக்கு அடிமை சாசனம் எழுதித்தர வேண்டுமா என்று சுயராஜ்ய சிந்தனை உள்ளவர்கள் கவலைப்படுகின்றனர். மின்னுற்பத்தியில் பற்றாக்குறை நிலவுகிறது, நிலக்கரி கையிருப்பும் குறைந்து வருகிறது, அணு மின்சக்தி திட்டத்தின் பின்விளைவுகள் பற்றிய அச்சத்தால் மக்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற சூழல் இல்லையே என்று தொழில்முனைவோர் கவலைப்படுகின்றனர்.

கல்வி நிலையங்களின் தரம் குறைந்து வருகிறது, உயர் கல்வி பெற விரும்பும் அனைவருக்கும் வாய்ப்பு தர முடியாமல் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதே என்று கல்வியாளர்கள் கவலைப்படுகின்றனர்.
சுகாதார வசதியில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம்; அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள், பணியாளர்கள், டாக்டர்கள் இல்லாமல் பிறந்த குழந்தைகள்கூட உயிரிழக்கும் ஆபத்து நேரிட்டுவிட்டதே என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் கவலைப்படுகின்றனர்.

வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, உலக பணக்காரர்களில் இடம் பெற்றுள்ள இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் ஊழல் செய்தும் வரி ஏய்ப்பு செய்தும்தான் இதில் இடம் பெற்றனர் என்ற அவமானம் என்று எத்தனையோ விஷயங்கள் கவலைக்கிடமாக இருக்கின்றன.

இந்த நிலையில் குப்பம்பட்டி வார்டு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா, யார் வேட்பாளர் என்று கேட்டால் கூட மத்தியக் கட்சித் தலைமையின் முடிவுக்கே விடும் காங்கிரஸ் தலைவர்களுக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதால், இந்த நிலைமை எப்போது மாறும் என்கிற கவலை நம்மைத் தொற்றிக் கொள்கிறது.
இந்த நாட்டின் தலைமை சரியில்லை, முடிவெடுக்க முடியாமல் திணறும் போக்கு நல்லதல்ல என்று விப்ரோ நிறுவனத்தின் தலைவர் தொழிலதிபர் அசீம் பிரேம்ஜி, பெங்களூருவில் கவலை தெரிவித்திருப்பது நூறு சதவீதம் நியாயமே என்று வழிமொழியத்தானே தோன்றுகிறது.

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.